முத்தமிழுள் இசைத்தமிழும் இயற்றமிழும் கவர்ந்த அளவிற்கு நாடகத்தமிழ் ஈர்க்கவில்லை. ஒருவேளை, இயலும் இசையும் தேவையான கதை சொல்லியதால், நாடகம் தேவைப்படவில்லையோ என்னவோ! எழுதுவதற்கு இயல் கைகூடினாலும், படிக்க இசையே அதிகம் கவர்கிறது!
இசைத்தமிழென்றால் அது கம்பனாகவோ, வள்ளுவராகவோ பாரதியாகவோதானிருக்கவேண்டும் என்பதில்லை. கூத்தின் நடுவே வரும் திரையிசையாக இருந்தாலும் அது இனிமைபயப்பதாகவே தோன்றுகிறது! திரையிசையை ஒரு சின்னத்தீக்குச்சிக்குத் தின்னகொடுக்க நினைத்த வைரமுத்துவே பழைய பனையோலைகளில் எழுதியபின் திரைக்காக கவியெழுதும்பொது என்போன்றவர்கள் ரசிப்பதில் வியப்பென்ன?
ஒப்புமை சரியில்லை என்று இலக்கியவாதிகள் போர்க்கொடி தூக்கலாம்! பாரதியின் காதல் கவிதைகளை வாசிக்கும்போதும் தேசபக்திமிகும்; அவர் கண்ணம்மா தனியிருப்பாதாக சிறையிருப்பதாகப் பாடினாலும், அது இந்தியத்தாய் சிறையிருப்பது கண்டவேதனையாக நம்மால் எளிதில் உணரமுடியும்; ஆனால் வைரமுத்து தாய் மண்ணே வணக்கம் எனப்பாடினாலும் அதில் தாயன்பு தெரிவதைவிட தேசப்பற்று தெரிவதைவிட காதல் வழிவதாய்த்தான்படும் என்ற கருத்து கட்டாயம் வருமென அறிவேன்! ஆனால், ஒப்பீடு கவிகளுக்கிடையே அல்ல! எனவே, நண்பர்காள்! இதுகுறித்த வாதம் தவிர்ப்போம்! :-)
தமிழின்கூறுகளில் இசைத்தமிழ் மற்ற இரண்டையும் தன்னுள் அடக்கியிருப்பதாகத்தோன்றுகிறது! நாலடியில், இரண்டடியில் உலகஞானம் அளிப்பது இசைத்தமிழின் உயர்வன்றோ? அதுமட்டுமல்ல, ஒருவரியில் கதை சொல்லும் வலிமையும் இசைத்தமிழுக்கு மட்டுமே இருப்பதாகப்படுகிறது. சமீபத்தில் என்னைக்கவர்ந்தது திரைக்கவிஞர் கபிலனின் "குழந்தையருகே குரங்கைப் பயந்தேன்" என்ற வரியொன்று! இதை இயலாலோ, கூத்தாலோ விளக்குவதற்கு எத்தகைய முயற்சிவேண்டும்? முடியுமா என்பதே கேள்விதான்!
No comments:
Post a Comment