Wednesday, April 20, 2016

நீத்தேனில்லை…

ஆஹா! பற்றற்றவளாக என்னைப்  பாரோட்டியோருக்கு நன்றி. கேட்பதற்கு என்ன சுகமாக இருக்கிறது!

ஆனால், பற்றறுப்பது குறித்த யோசனையுடன் இருப்பவர்களெல்லாம் அறுத்தவர்களில்லை, முக்கியமாக அந்த நிலை நானடைய இன்னும் பல காலம் ஆகும் என்று  என் மறுப்பைப் பதிவு செய்யவே இந்தக்கட்டுரை

பற்றில்லாமலில்லை! அதேசமயம், பற்றறுநிலை மேல் பேராசையுடன் இருக்கிறேன்பேராசை என்று நான் சொல்ல பல காரணங்கள்! மாணிக்கவாசகர் போல, "வெற்று அடியேன்" என்ற பணிவு இல்லை! சரியாகச் சொல்லப்போனால் இருந்ததே இல்லை! விடுதிகண்டாய்; விடிலோ கெடுவேன் என்ற பதற்றம் இல்லை! அதற்கு பூனைகவ்விய குட்டியின் மனநிலை வேண்டும்! என் மனநிலை குரங்குக்குட்டி! நான்தான் பிடிக்கவும் விடவும் வேண்டும் என்பது என் மனோபாவம்! எனவே எதைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் குழப்பமாக எப்போதும் இருந்திருக்கிறது!

உற்றுத்தேறினேனில்லை! உற்றுப் பார்த்து அறிய முயல்கிறேன்! ஆனால், நான் உறவேண்டியதெல்லாம் உற்றேனா, அனுபவிக்க வேண்டிய இன்பதுன்பங்களை கடந்துவிட்டேனா என்று தெரியவில்லை! இன்னும் கடக்கவேண்டிய தூரம் எவளவு என்றும் தெரியவில்லை! கடந்த தூரத்தையும் அறிந்து கடந்தேனா என்றும் தெரியவில்லை! உற்றதையெல்லாம் உற்றுப்பார்த்தேனா என்றும் தெரியவில்லை!! உற்றுப் பார்த்து அறிய முயல்கிறேன். அவ்வளவுதான் !

மேலும், நடப்பது நாராயணன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்பவை என் கொள்கைகளில்லை. "செய்வன திருந்தச் செய்" பக்கம் நான்! அதற்காக பலனை எதிர்பாராத பெரிய கர்மயோகி என்று யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் :-) எதையும் செய்வதற்கு முன் ஏன் செய்யவேண்டும் என்று நூறாயிரம் கேள்விகள் என்னையா பிறரையோ கேட்காமல் செய்த நினைவில்லை! விளைவுகள் குறித்த சலனம் இல்லாமலில்லை! அவ்வளவு ஏன் ! அழுக்காவதற்காகவே, (அல்லது நம்மை அழுக்கிலிருந்து காப்பதற்காகவே) உள்ள காலணி அழுக்காவதைக்கூட நான் விரும்பியதில்லை! இந்த அழகில், நானாவது பற்றாவது அறுப்பதாவது! நல்ல கற்பனை உங்களுக்கு நண்பர்காள்! ஆனாலும் கேட்பதற்கென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது!

பற்றில்லாமல் இருக்கவேண்டும் என்று ஆசைப்படும் என்னைத்  துறவி போல நீங்கள் பேசுவது, லாட்டரி டிக்கெட் வாங்க ஆசைப்படுபவரெல்லாம் கோடீஸ்வரர் என்று சொல்வதற்குச் சமம்! உவமையை தயவுகூர்ந்து நன்றாகக் கவனிக்கவும்! உழைப்பவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! அது கட்டாயம் என்றேனும் நடக்கும்! லாட்டரி விழலாம் ஆனால் கட்டாயம் நடக்கும் என்று சொல்வதற்கில்லை! இது இன்னமும் ஒருபடி மேலே! இன்னமும் லாட்டரி டிக்கெட்டும் கூட வாங்கவில்லை! வாங்கலாம் என்று ஆசை அவ்வளவுதான்! வாங்கக் கடையுமில்லை பணமுமில்லை!! நிகழ்தகவு (Probability) கற்றோருக்குத் தெரியும், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் ஒன்றாக நடப்பதற்கான வாய்ப்பு  அவை தனியாக நடப்பதற்கான வாய்ப்பைவிடக் குறைவென்பது!

எனவே, நீத்தலை நினைக்கிறேன்அவ்வளவே!! ஆனால்  நீத்தேனில்லை!

No comments: