Saturday, December 5, 2015

மயிலிறகால் ஒரு யுத்தம்!

செப்டம்பர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கிய  மயிலிறகுகளைக் கொடுக்க முடியாமல் போயிற்று. அது குறித்த வருத்தம் இருந்த போதிலும், இறகுகளின் அழகில் மயங்கி அவற்றை அறைகளில் வைத்திருந்தேன்என்ன ஆச்சர்யம்!! என் பரணில் வசித்த அணில்கள் திடீரென காலி செய்துகொண்டு சென்று விட்டன. பின்னர்தான் தெரிந்தது அணிலுக்கு  மயிலிறகென்றால் பயமென்று! மயிலுக்கு அணிலும் பல்லியும்  இரை! அதனால் அவற்றுக்கு மயிலும் மயிலிறகும் பயம்! என் வீட்டில் இப்போது அணிலுமில்லை, பல்லியுமில்லை

அணில்கள் வரவர தொந்தரவாக மாறிக்கொண்டிருந்தன அவையறியாமலே! காயப்போட்ட என் உடைகளைக் கடித்துக் குதறின. புத்தகங்களும் இரையாயின. கோபம் வந்தாலும், தனக்கு கூடு கட்ட அவை எடுப்பது நியாயமானது என்று தோன்றிற்று. தீதென்று தெரிந்தும் வீடுகட்ட மனிதன் ஆற்றில் மணல் அள்ளவில்லையா? அதை விட அறியாப்பிழை செய்த அணிலைப் பொறுப்பது சரியாய்ப்பட்டது. ஆனால் சிரமமாக இருந்தது. அவை என்னை விட்டு நீங்கியது வருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!!!


ஆஹா! மயிலிறகால் கூட யுத்தம் செய்யலாம் போல! மௌனம் கூட வதைக்கும் போல! வித்தை தெரியாமலே  யுத்தம்  செய்யலாம்  போல! சில சமயம்  வித்தை தெரியாமலிருப்பது உசிதம் போல! தெரிந்திருந்தால்   மயிலிறகு வாங்கியே இருக்கமாட்டேனே! வாழ்க்கை சுவாரஸ்யமானது! எண்ணங்கள் விநோதமானவை! ஒருவரையே  ஏன் சந்தித்தோம் என்றும்ஏன் தாமதமாகச்  சந்தித்தோம் என்றும், நல்ல வேளை  சந்தித்தோம் என்றும்,   நல்ல வேளை பிரிந்தோம் என்றும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றுவது ஆச்சர்யமானது!

No comments: