Sunday, August 23, 2015

உலகெங்கும் அணில்கள்!

அயல்நாடுகளுக்குச் செல்ல வீசா எடுப்பதற்கான விண்ணப்பங்கள் என்னுள் ஏற்படுத்தும் சிந்தனைகள் பெரும்பாலும் இனியவையாய் இருப்பதில்லை! ஏதோ நம் நாட்டில் ஒன்றுக்கும் வழியில்லாமல் அவர்கள் தேசத்துக்குச் செல்வது போன்ற மாயை ஏற்படுத்தும் கேள்விகள் பல்வேறு உணர்வுகளைத்தூண்டும்!

எப்போதும் பூக்கள் பூக்கும் தேசத்தை விட்டுவிட்டு, எப்போதும் பனிபெய்யும் உறைந்த பூமியை நாம் விரும்புவோம் என்று தானாகவே கற்பனைசெய்துகொள்ளும் தேசங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன சிலசமயம்விசா கேள்விகளில் தெரியும் ஆணவம் கோபத்தை ஏற்படுத்துகிறது சிலசமயம்! குடியேறிகளின் தேசங்கள் மற்றவர்கள் குடியேறிவிடக்கூடாது என்று நினைப்பது கேலிக்குரியது; இந்தியா சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விஎழும் சிலசமயம்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நினைத்த தேசம், அதிதி தேவோ பவ என்று நினைத்த தேசம், முகம் திரிந்து நோக்கினாலே குழையும் விருந்தினரை சோதிக்க நினைக்காத தேசம் இப்படி, தன்னை மூடிவைத்துக் கொள்ளாததில் வியப்பென்ன என்ற அலட்டல் மனதுக்குள் எழும் சிலசமயம்!

என் தேசம் என்பது எனக்கு வெறும் மண்ணல்ல, நிலமல்ல, என் பெயரிலிருக்கும் அசையும் அசையா சொத்துகளல்ல! நான் இந்த தேசத்துக்குத் திரும்புவேன் என்பதற்கு இவையா காரணம்என் தேசம் என்பது என் மக்கள்எத்தனை பெரிய செல்வமும், இயற்கை அழகும், எளிதான வாழ்க்கை முறையும், அவை ஏதும் இல்லாமல் சுரண்டப்பட்டுவிட்ட இந்த தேசத்தைவிட்டு என் மனதைப் பிரித்துவிடும் என நான் நம்பவில்லை! உலகம் முழுவதும் ஒரே ஊராக மாறிவிட்ட இந்த யுகத்தில் தேசப்பற்று என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கொள்கையென்று தோன்றக்கூடும்! ஆனால் என்னால் அப்படி இருக்க முடிந்ததில்லை! பிற தேசங்களை அவர்களது கலாசாரத்தை மதிக்கிறேன் ஆனால் என் தேசத்தை நேசிக்கிறேன் - அதன் நிறைகுறைகளோடு!

எத்தனை ஊருக்குப் போனாலும், அந்த ஊரில் வேரூன்றும் நாற்றல்ல நான், என்வேர்கள் எப்போதும் இந்தியாவில்தான் என்றும், என் மண்ணின்மணம் மாறாமல் வளப்படுத்துவது எப்படி, மற்ற தேசங்களிடமிருந்து என்ன பாடம் படிக்கவேண்டும் என்ற கேள்விகள்மட்டும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என்றும், இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது!


சரி போகட்டும், என்னுடனிருக்கும் அணில்போலவே மொழிபுரியாமல் மனம் புரியாமல் இருந்துவிட்டுப் போகட்டும்! எம் தேசம் வலிமையானால், வளமானால், யார் தயவையும் நாடாத திறம்பெற்றால், அப்போது எம் மொழி ஒருவேளை புரியக்கூடும்! அதுவரை ஒன்றாகவே இருந்தாலும் அணிலும் நானும் வேறுதான்! இருவர் கண்ணிலும் பயத்தின் சாயல்தான்!

No comments: