Wednesday, March 26, 2014

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

சில மாதங்களாக வலியையே எழுதியதால் ஏதோ நான் வலியில் உழன்று, சொல்லொணாத்துயரில் தவிப்பதாய் ஒரு பதற்றம் என் அன்பு வட்டத்தில்! நிச்சயமாய் வலியற்ற வாழ்வில்லை எனக்கு - வலியென்ற சொல்லின் இருபொருளும் உண்டெனக்கு! வலி தந்த வலிமையும், இதம் தந்த இனிமையும் சேர்ந்ததே வாழ்வு! என் வழியும் ஒன்றும் விலக்கில்லை இந்த விதிக்கு!

அன்பைப் பொழியும் பெற்றோர்! எதையும் எதிர்பாராமல் அன்புசெலுத்தும் உற்றார்! தவித்து நிற்கும்போது தாங்கிப்பிடிக்க நண்பர்களும், சுற்றமும்! கற்றதைவெளிக்காட்டவும், மேலும் கற்கவும் வாய்ப்புள்ள வேலை! கரும்பு தின்னக் கூலியாக, தேவைக்குப் பணம் - சொல்லப்போனால் தேவைக்கு அதிகமாகவே பணம்! உணவு, உடை, உறையுள் அனைத்தும் விரும்பிய வண்ணம்! உலக இயக்கம் குறித்துப்  பேசவும் நண்பருண்டு, வெறும் கதை பேசவும் நண்பருண்டு! தவறுகளைச்சுட்டிக்காட்டி இடித்துரைக்கவும், திட்டங்களுக்கு உரைகல்லாகவும் இருக்கும் நட்புண்டு! நட்போடு இருக்கும் சுற்றமும்,சுற்றம் போலக்காக்கும் நட்பும் சூழ்ந்த வாழ்வு எனது! ஓய்விலாப்பணிகளுக்கிடையிலும் கற்றுத்தரவும், மனச்சுமை தீர்க்கவும், மிக ரசித்த விஷயங்களைப் பரிமாறவும் நேரம் ஒதுக்கும் சுற்றமும் நட்பும் உண்டு!

கல்வியும், வாழ்வும் கற்றுத்தந்த ஆசிரியர்(யை)களுடன் நினைத்தால் இன்றும் பேசுவதற்கு வாய்ப்புண்டு! கற்றுத்தரத் தயாராக இருக்கும் ஆசிரியர்களைப் புதிதாய் பெறுவதற்கும் சந்திப்பதற்கும் வாய்ப்புண்டு! பாரதியைப் போன்ற, வள்ளுவர் போன்ற மானசீக குருமாரை தினம் சந்திக்கும் இணையமும் இதயமும் உண்டுஎன் பள்ளிப்பருவத்தில், கடையம் என்னும் சிற்றூரில்பாரதி நடந்த வீதிகளில் நான் உலவிய நினைவுண்டு! பாரதி குடியிருந்த வீட்டை, பாரதி அமர்ந்த பாறையை, அவர் கால் நனைத்த நதியை, அவர் பெயர் கொண்ட பள்ளியை, கல்லூரியைச் சுற்றித்திரிந்த தித்திப்புண்டு மனத்துள்!

பாரதி சொல்வது போல் இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது

இவை தாண்டி வேறென்ன வேண்டும் வாழ்வு இனிக்க!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

வலி தந்த வலிமையும், இதம் தந்த இனிமையும் சேர்ந்ததே வாழ்வு!


"இது ஒரு அழகிய நிலாக்காலம்
விழாக்கோலம்..!!

Geetha Justin said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி