Friday, March 14, 2014

மீண்டும் வலி!

முதல் கட்டுரை எழுதி இரண்டு மாதங்களான பின்னும், வலி குறித்த விவாதம் இன்னும் என்னை விடுவதாயில்லை! எத்தனை பேர் வலியுடன் அல்லது வலி குறித்த சிந்தனையுடன் என்பதற்கு இது சான்று போலும்!

மனிதர்கள் வலியை மூன்று விதமாகக்  கையாளுவதாகப்படுகிறது!

1. வலி கண்டு துவண்டுபோய் விரக்தியுற்று தவறான முடிவெடுப்போர் / விரக்தியால் செயலிழப்போர். மிகவும் சாதரணமானவர்கள் இவர்கள்.

2. வலியைச் சமாளித்து வாழ்வை இயல்பாகத் தொடருவோர். தைரியமானவர்கள் இவர்கள். வலி தாங்குவதின் இரண்டாம் நிலை இது...

3. தன் வலியைச் சமாளிப்பதுடன், உலகின் வலியையும் தீர்க்கத்துணிவோர். வலியைக் கிரியா ஊக்கியாகப்பயன்படுத்துபவர்கள் இவர்கள்.உலகம் இயங்குவது இவர்கள் போன்றவர்களால்தான்! வாமனராய் அவதரித்த இவர்கள் தன் வலியோ, பிறர் வலியோ தந்த உந்துதலில் உலகளக்கும்வண்ணம் விஸ்வரூபம் எடுக்கிறார்கள்!


காந்தி என்றொருவர் உருவாகக் காரணமாயிருந்தது ஒரு வலி என்றால் அமிலவீச்சுக்குள்ளாகும் பெண்களின் துயர் துடைக்க எழுந்து நிற்கும் லக்ஷ்மி உருவாகக் காரணமாயிருந்தது இன்னொரு வலி! அமிலவீச்சில் முகம் கருகியபின்னும், முடங்கிப் போகாமல், அறுவை சிகிச்சையால் அழகை மீட்டெடுக்க முயற்சியெடுக்காமல், தன்னைப் போல வலியில் தவிக்கும் பெண்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் தொடங்கிய லக்ஷ்மியின் வலிமையை என்னவென்று சொல்வது! வலி வலிமையைத் தரும் என்பதற்கு இது நல்ல உதாரணமன்றோ நண்பரே!

No comments: