Sunday, September 16, 2012

விடை கொடு எங்கள் நாடே

நேற்றைய ஹிந்து நாளிதழில் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாதவனும் சிம்ரனும் நடித்த படத்தில் ஒரு romantic duet பாடல் கூட இல்லாததால் இந்த படத்தை தனது தோழி மறுத்ததைக் குறித்த வருத்தம்  தொனித்தது அந்தக்கட்டுரையில். பிறந்த ஊரிலேயே வேலை பார்த்து, மணம் முடித்து, பிள்ளை பெற்று, வேறு ஊர்களுக்கு உல்லாசப் பயணம் மட்டுமே மேற்கொள்வோருக்கு அந்த வலி புரியாதுதான்.

நான் தென்தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள்; வேலை நிமித்தம் தற்போது சென்னைவாசி. படிப்பிற்காக 1993 -லிருந்து வெளியூரில்தான் வாசம்.ஆனாலும், ஒவ்வொரு முறை தென்காசி ரயில்நிலையத்தை விட்டு ரயில் கிளம்புபோது இப்போதும் ஒரு வலி தொண்டையில் இருக்கிறது. இத்தனைக்கும் உயிருக்கோ வறுமைக்கோ பயந்து நான் புலம் பெயரவில்லை; என் பெற்றோர் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கிறார்கள்; நான் கவனிக்கவேண்டிய, பாதியில் விட்டுச்செல்லும் கடமை என்று ஏதுமில்லை; ஆனாலும் வயிற்றிலிருந்து தொண்டை வரை ஒரு வேதனை படரத்தான் செய்கிறது. இனி தென்காசியை நான் பார்க்கவே முடியாது என்ற நிலையில் நான் கிளம்பவேண்டியிருந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும் பொழுதே மனம் நடுங்கிப்போகிறது.

சென்னை வந்த புதிதில் என் வீட்டருகே தாயும் மகளுமாக இரு பெண்கள் குடியிருந்தனர். மிக அமைதியான முகங்கள் அவர்களுக்கு. மகள் computer வகுப்புக்குச் சென்று வருவாள். தாய் பெரும்பாலும் வெளியே எங்கும் செல்வதில்லை. இருவரும் பிறரிடம் அதிகம் பேசுவதில்லை. முதல் வருடம் தீபாவளிக்கு சில இனிப்புகளை அவர்களுக்கு எடுத்துச்சென்று வாழ்த்து சொன்னேன். அதன் பின்னர் அவர்கள் வழியில் கண்டால் சிரிப்பது என்று தொடங்கி அவர்கள் வீட்டுப் பண்டிகைக்கு இனிப்பு தருவது என்று நட்பு வளர்ந்தது. ஒரு நாள் அந்தப் பெண் தேங்காய்ப்பாலும் அரிசி மாவும் கலந்த இனிப்பு - தொதல் என்று பெயர் - கொண்டுவந்தாள். நான் சுவைப்பது அதுவே முதல் முறை. அது எப்படிச்செய்வது என்று கேட்டவுடன் அந்தப் பெண்களின் கண்களில் கண்ணீர்!! அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், 400 ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்புகளுக்கு நடுவிலிருந்த வீட்டிலிருந்தவர்கள். துப்பாக்கிச் சூட்டில் கணவனை இழந்து, நிலத்தையும் வீட்டையும் துறந்து 18 வயது மகளுடன் தாய் தனியாக வந்து வசிக்க வேண்டிய சூழல். மகளின் பிறந்தநாளுக்காக தொதல் செய்யும் போது அந்த அன்னைக்கு, தன் கணவனும், தென்னந்தோப்புகளும், வீடும் நினைவிலுறுத்தியதால் வழிந்த கண்ணீர் அது!! இந்தக் கண்ணீரின் வலி duet பாடல் தேடிய பெண் அறிவாளா என்பது கேள்விக்குறியே

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து வேலை பார்க்கும் மனிதர்களின் முகங்களை கவனித்திருக்கிறீர்களா? அவற்றில் ஒரு சில முகங்களே அமைதியாக இருக்கின்றன. பெரும்பாலும் வேதனை, பயம், கலக்கம், குழப்பம் இவைதான் அந்த முகங்களில் தென்படுகின்றன. இவர்கள் வறுமைக்குப்பயந்து புலம் பெயர்ந்திருக்கக்கூடும். என்னைப்போல வேலைக்காகத்தான் சென்னை வந்திருக்கிறார்கள். ஆனால், நான் சென்னை வரும்போது என்ன வேலைக்கு வருகிறேன், என்ன கூலி, எங்கு வசிப்பு என்று பல விஷயங்கள் எனக்குத்தெரியும். சென்னையில் பேசப்படும் மொழி தெரியும். இவை ஏதுமறியாமல், வேறு வழியின்றி ஒரு ஊருக்குச்செல்வது துறவிகளுக்கு வேண்டுமானால் எளிதாயிருக்கலாம். சாமானியர்களுக்கு இது மாபெரும் வலி.

இந்த வலி புரியவில்லையென்றால் "விடை கொடு எங்கள் நாடே" என்று புலம் பெயரும் மக்களின் குரலாக ஒரு பாடல் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் வரும்; உயிரை உருக்கும் பாடல்!!! படத்தைப்பார்க்கவில்லையென்றாலும் பாடலையாவது கேளுங்கள். அதன் பின் புலம் பெயர்ந்த மக்களின் முகங்களைக் கவனியுங்கள்; அவர்கள் அனைவரும் தமிழகத்தில் கொள்ளையிட வந்தவர்கள் என்ற நோக்கில் இல்லாமல், எதற்கோ அஞ்சி வாழ்வு தேடி அமைதி தேடி வந்தவர்கள் என்ற நோக்கில் அவர்களைக் கவனியுங்கள், அணுகுங்கள். வந்தாரை வாழ வைத்த தேசமிது!!! அந்த மரபைத் தொலைக்காமல் கட்டிக்காப்போம்!!! கட்டிக் காக்காவிடிலும் வெட்டிச் சாய்க்காமலாவது இருப்போம்!!!

1 comment:

Sugumaran said...

nice wherever whenever