Sunday, October 16, 2011

திருப்பூந்துருத்தி...

திருப்பூந்துருத்தி எனும் பாலகுமாரன் கதை நேற்றும் இன்றும் முழுதாய் எனை ஆட்கொண்டது. 1990 -லிருந்து நான் பாலகுமாரன் கதை படித்தாலும், அவரது எத்தனையோ ஆன்மீக கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இந்தக் கதை மனதைச் சுட்டது. இதே கதை போன வருடம் படிக்கும் போது இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஒரு வருடத்தில் நடந்த நிகழ்சிகளின் விளைவாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தலோ இன்று ஏதோ ஒரு நெகிழ்வு...

கொஞ்சம் ஏக்கமாகக்கூட இருக்கிறது, இது போல, ஒரு குரு நம் கண்முன் தோன்றி, நம்மை வழிப்படுத்தமாட்டாரா என்று. சலனம் இல்லாதிருத்தல் என்பது எனக்கு ஒரு கருத்தாகப்புரிந்தாலும், நடைமுறைப்படுத்தலில் உள்ள குழப்பங்களை, சிக்கல்களை எளிதாக்கத் தெரியவில்லை; எப்படி சமாளிப்பது என்ற தெளிவுமில்லை. அவர் சொல்வது போல, இறை தன்னை உணர்த்த நினைக்கும்வரை காத்திருப்பது ஒன்றுதான் வழி போலும்...

உங்கள் வீடுகளைச் சுத்தமாக்கி, வாசனையாக்கி, ஜன்னல்களைத் திறந்துவையுங்கள், ஒரு நாள், தென்றல் உங்கள் வீட்டுக்குள்ளும் வரலாம் என்றொரு வாக்கியம் உண்டு. கோபமின்றி, வெறுப்பின்றி, அஹங்காரமின்றி, காமமின்றி, பொறாமையின்றி, பொய்யின்றி, பேராசையின்றி, எனது என்ற ஆளுமை எண்ணமின்றி, இவையில்லாமல் இருக்கும் கர்வமின்றி மனவீட்டைச் சுத்தமாக்க இயலுமா? மலைப்பாக இருக்கிறது. ஒரு குருவால் ஒரு நொடியில் இவை அனைத்தையும் துடைத்தெறிய இயலும் என்று பாலகுமாரனும், இன்னும் சிலரும் கூறினாலும், அவரவர் வினையை அவரவர்தானே களையவேண்டும் என்று எண்ணமே மேலோங்குகிறது. விவேகானந்தருக்கு ஒரு இராமகிருஷ்ணர் போல நமக்கும் ஒருவர் கிடைப்பார், சரியான நேரத்தில் வருவர் என்று சொன்னாலும், விவேகானந்தர் எத்தனைப் பிறவிகளாக தன்னைச் சுத்தம் செய்தாரோ இந்த பிறப்பில் ஒரு இராமகிருஷ்ணர் கிடைக்க என்றுதான் தோன்றுகிறது.

திருப்பூந்துருத்தியில் மணி என்றொரு தொழிலதிபர் தன் தந்தையின் மரணத்துக்கு முன், அகவிழிப்பு பெறுகிறார். அதன் பின்னர் அவர் சங்கரர் போல பிற உடல்களுள் நுழைந்து அவர்கள் வாழ்வையும் சரியாக்கி, தானும் வாழ்வை உணர்ந்துகொள்கிறார்; சாதாரண மனிதர்களின் வாழ்வில் சரியான மாற்றங்களை உண்டாக்குகிறார். இப்படி ஒருவர் நம் வாழ்விலும் வந்து நம்மையும் சரியாக்கினால் எப்படியிருக்கும் என்ற எண்ணமும் எழுகிறது; மணியைப் போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடைய மனமும் விழிக்காதா என்ற எண்ணமும் எழுகிறது. யார் சொல்லக்கூடும் எது நிகழும் என்று? என் தகுதி என்னவென்று?

No comments: