Friday, January 22, 2016

ஆச்சரியங்கள்!

தாக்ஷாயிணியென்று மனைவி அறியப்படுவதை விரும்பாத சிவன்களும்கூட, மகள் ஜானகியாக, மைதிலியாக, வைதேஹியாக அறியப்படவேண்டும் என்று ஆசைப்படும் ஜனகனாக மாறும் வினோதம்!

கண்ணோடு கண்ணிணை நோக்கியதால் மட்டுமே காதல்வயப்பட்ட ராமனும் சீதையும் மாலைமாற்றும் ஓவியம், காதல்மணத்தை அடியோடு வெறுப்போரின் இல்லத்திருமண அழைப்பிதழிலும் அச்சிடப்படும் வினோதம்!

வாழ்நாளில் பெரும்பகுதியில் பிரிந்திருந்த, ராமனும் சீதையும் நல்ல தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டபடும் வினோதம்!

மயங்கிக்கிடந்த ராமனைஇறந்துவிட்டதாகக் கருதி, என் உயிர்கொள்ளாதிருப்பதென்ன எமனே என்றழுத, தன்னை வருத்திய அரக்கியரையும் துன்புறுத்த நினைக்காத சீதையை உயிருடன் தீயில் இறங்கச்சொன்ன ராமன் கருணைவடிவானவனாகச் சித்தரிக்கப்படும் வினோதம்!

தீயில் தானும் இறங்கி தன் கற்பின் திண்மையை உணர்த்தத்தவறிய ராமன், தீயில்பூத்தமலராக வெளிவந்த சீதையை, பழிப்பு இலள், இனிக் கழிப்பிலள் என்று புகழ்ந்து, தாயாக்கிப் பின்னர் அவளைத் தனியாக  வனவாசம் அனுப்பிய ராமன் அறம்வளர்ப்பவனாகப் புகழப்படும் வினோதம்!

கொடுத்தவாக்கிற்காக உயிர்கொடுத்த தசரதனின் மகனாக இருந்தும், திருமணத்தில் கொடுத்த வாக்கையும், இனிக் கழிப்பிலள் என்று இரண்டாம் முறையாகக் கொடுத்த வாக்கையும் மீறிய ராமன், தந்தைசொல் மீறாத மகனாக சித்தரிக்கப்படும் வினோதம்! சொன்னால் மட்டுமே மீறாதவன், தந்தை வழி நடப்பவனா?

ராவணன்வதைக்குப்பின் போர்க்களம்வந்த சீதையைக்கண்டு படமெடுத்தநாகம்போல் சீறிய ராமன், மகுடம் சூட்டுவதற்கு சற்றுநேரத்துக்குமுன் பறிக்கபட்டாலும்கூட சித்திரத்திலுள்ள தாமரைபோல மலர்ந்தமுகமுடையவனாக இருந்தான் என்று அவனை உயர்பண்பாளனாகக் கொள்ளும் உலகம் வினோதம்! செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்! அல்லிடத்து காக்கினும் என்? காவாக்கால் என்?

காலப்போக்கில், என் பல்வேறு கருத்துகள் மாறியபோதும், மூன்று வருடத்துக்குமுன் எழுதிய இந்தக் கட்டுரைக்கருத்துமட்டும் இன்றும் மாறாத வினோதம்!

இந்துமதம் மிகப்புகழும் கதாநாயகனை, இறை அவதாரத்தை, இத்தனை பழித்தும், இன்றுமுதல் நீ இந்துஇல்லை, உன்னோடு அன்னம் தண்ணீர் புழங்குவாரில்லை என்று என்னை "மதப்ப்ரஷ்டம்" செய்ய நாட்டாமைகள் இல்லாத வினோதம்!

இத்தனைக்குப்பிறகும் என்னைச்சுட்டுத்தள்ளாத இந்தநாட்டை சகிப்புத்தன்மையற்றதாகக்காட்ட முயலும் உலகம் வினோதம்!

No comments: