Sunday, August 3, 2014

கீதையின் கண்ணன்!


பாரதியைப் பிடித்ததாலோ என்னவோ, சிறு வயது முதலே கண்ணனை எனக்குப் பிடித்தது! கண்ணன் கீதை சொன்னதால், என் பெயரில் கீதை உள்ளதால் பிடித்ததோ என்னவோ! குறும்பும் உற்சாகமுமாகத் திரிந்த கண்ணனின் கதைகள் பள்ளிப்பருவத்தில் ரசிப்புக்கு உரியவையாக இருந்தன. கடவுள் திருடலாமா என்ற கேள்வி எழாமலில்லை. ஆனால் அதையும் மீறி எதிரிகளை எதிர்ப்பதிலும் நண்பர்களுடன் விளையாடுவதிலும் உற்சாகமாக ஈடுபட்ட கண்ணனை, தனது முடிவுகளைத் தானே எடுத்த கண்ணனைப் பிடித்தது.

அலைபாயுதே கண்ணா என்ற பாரதி பாடலைப் பாடாத கேளாத விழாக்கள் விழாக்களே இல்லை என்ற அளவுக்கு பாரதியும் கண்ணனும் எங்கள் பள்ளியில் கோலோச்சினார்கள்! கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள் என்ற பாடலுக்கு அபிநயம் பிடிக்க ராதையாய் மேடையேறினாலும், கண்ணனாயில்லையே என்ற கவலை ஒரு வாரம் இருந்ததின் காரணம் கண்ணன் மீதிருந்த பிடிப்பா அல்லது கண்ணனாய் மேடையேறிய, என்னைவிட  ஒரு வயது சிறிய ஹேமா என்னைவிட இரண்டங்குலம் உயரமாயிருந்ததா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை :-)

ராமனைப் போல கண்ணன் யாரையும் தீக்குளிக்கச் சொல்லவில்லை என்ற ஒரு காரணமே கண்ணனைப் பிடிக்கப் போதுமானதாயிருந்தது அடுத்த சிலவருடங்களுக்கு. பல பெண்கள் பின்னால் அலைந்தவன் என்ற குற்றச்சாட்டு காதுகளில் ஏறவேயில்லை! ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர்கள் என்ன செய்தாலும் சரி போலும்! பாண்டவர்களை, முக்கியமாகத் தர்மனை வெறுத்தேன்! ஆனால் திரௌபதிக்காக போரில் தந்திரங்கள் செய்த கண்ணனை ரசித்தேன்! அர்ஜுனனுக்காக அவன் மீது கொண்ட நட்பால், அத்தை மகனென்ற பிடிப்பால் அவனுக்குத் தேரோட்டினான் கண்ணன் என்பதை தீவிரமாக மறுத்தேன்! திரௌபதிக்காக, திரௌபதியே போரிட்டிருக்கலாம், போரிட்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்திருக்கிறேன்! அவளுக்கு ஏதோ காரணத்தால் முடியாமல் போக, அவளுக்காக அர்ஜுனனனையும் இன்னபிற வீரர்களையும் வேலை வாங்கினான் கண்ணன் என்றேதோன்றிற்று!

வேலைக்கு வந்து மேலாளராகி அதன்பின் மென்பொருள் செய்யும் வழிமுறைகளைப் பிறருக்குக் கற்றுத்தரும் நிலைக்கு உயர்ந்தபோது, போரில் ஈடுபடாமல் போர்செய்யும் உத்திகளைக் கற்றுக்கொடுத்த கண்ணனை ஆச்சார்யனாகப் பிடித்தது! பக்தி, கர்ம, ஞான யோகங்களைப் பற்றிப் படிக்கும்போதும் கண்ணனைத்தான் பிடித்தது! காரண காரியம் கருதாது தீவிர பக்தி செலுத்தும் மனநிலையும் எனக்கில்லை, கேள்வியெழுப்பாமல் எதையும் ஏற்கும் மனநிலையும் எனக்கில்லை - அதனால் பக்தி யோகம் வாய்க்கவில்லை! ஞான யோகம் வேண்டுமாயின் ஆத்மவிசாரம் செய்யும் திடமும், நுண்ணறிவும் தேவை. கருத்தைச் செயலாக்கி, அதன் விளைவைப் பார்த்தால்தான் ஒத்துக்கொள்ளும் வினோத மனம் என்னுடையது! அதனால் கர்ம யோகம் ஒன்றுதான் சரிப்படும் என்ற முடிவுக்கு வந்தபோதும் துணைக்கு வந்தது கண்ணன்தான்!

தேவகி போல ஏழு பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சாகக்கொடுத்த வலியை  அனுபவிக்க நேர்ந்த போது, கண்ணனை மகனாய்ப் பார்க்கத்தோன்றிற்று! எல்லாக் கண்ணனும் மகவாய்த் தெரிந்த காலம் போய், எல்லாக்குழந்தையும் கண்ணனாய்த் தெரிந்தது!

கண்ணனைக் குழந்தையாய், காவலனாய், காதலனாய், ஆசிரியனாய், தோழனாய்ப் பார்த்த பாரதியைப் படித்ததால் இப்படித் தோன்றுகிறதா என்று யோசிக்க யோசிக்க, என்னைப் போலவே பாரதிக்கும் கண்ணனைப் பிடிக்கும் என்பதால்தான் பாரதியையே எனக்குப் பிடித்ததாகப்படுகிறது! ஹ்ம்!

No comments: