Saturday, November 9, 2024
அப்பாக்களுக்கு மட்டும்...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வரிகளுடன் நா முத்துக்குமார் எழுதிய பாடலொன்று மிகவும் பிரபலமானது. என்னைப் பொறுத்தவரை மகள்களைப் பெற்ற அப்பாக்கள் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்...
மனைவியும், பிற பெண்களும் கூட யாருக்கோ மகள்தான் என்ற நினைப்பே இல்லாமல், அவர்களை, சின்னதும் பெரியதுமாய் அவமதித்த / அவமதிக்கின்ற / வருத்துகின்ற புரிதல் கூட இல்லாமல், தன் மகள் மட்டும் ஒரு ராஜகுமாரி என்று நம்பும், தன் மகளை அவள் கணவனோ, பிற ஆண்களோ நிந்திக்கும் போதும், மகள் சமூகத்தின் அவலங்களில் அல்லாடும்போதும் அங்கலாய்க்கும் தந்தைமார்கள், ஆச்சர்யமானவர்கள்தானே!!! ஒருவேளை பார்வை குறைபாடோ, அல்லது மறதி நோயோ அல்லது வேறு ஏதேனும் மூளைத்திறன் குறைபாடோ என்று நாம் இரங்கும் அளவுக்கு ஆச்சரியம்தான்...
பெண்கள் நைட்டி போடலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த வீடுகளில்தான், மகள்கள் அரைக்கால் சட்டைகள் (லெக்கின்ஸாகவும் இருக்கலாம்) அணிகிறார்கள் என்ற, யாரோ எழுதிய வரி அவ்வப்போது நினைவிலாடத் தவறுவதில்லை... இதில் எந்த உடை சரி தவறு என்பதல்ல கேள்வி; அவரவர் உடை அவரவர் வசதிப்படி!!! ஆனால், தனக்கொரு வழி பிறருக்கு வழி என்று நினைப்பது பொதுவாக மனித இயல்பா அல்லது ஆண்களின் பிறப்புரிமையா என்பதுதான் கேள்வி!!! ஒருவேளை தன் அனுமதியின் பேரில் நடப்பதாக நிறைவடைகிறார்களோ என்னவோ!!!
அந்த தந்தைகளுக்குப் புரிகிறதோ இல்லையோ, காலம் மட்டும் தன் கணக்கைத் தவறவிடுவதேயில்லை!! எப்படியாவது புரியவைக்க முயன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும் என்னவோ, அவர்களுக்கு, தாம் தம் மனையாளுக்கும், பிற பெண்களுக்கும் இழைத்த குற்றங்கள் புரிந்தபாடாயில்லை.... புரிந்தாலும், சரியானதைச் செயலாக்கத் தெரியவில்லை... புரிதலுக்கும் செயலாக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி எல்லை நீத்த பெருவெளி....
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மகள்களைப் பெற்ற தந்தைமார் பாக்கியவான்கள்!! பாடமாவது கிடைக்கிறது - புரிவதும் புரியாததும் அவரவர் ஞானத்தையும் பூர்வ புண்ணியத்தையும் பொறுத்தது ;-) ;-) மற்றவர்களைப் பெற்ற தகப்பன்களுக்குப் புரிய வைப்பார் யாரோ!! எதுவோ!! புரியவேயில்லை என்றால் செயல் எப்போது / எப்படி மாறும்!!
மாறாது என்று விட்டுவிடக் கூடிய விஷயம்தானா இது! விட்டுவிடலாம்தான்!! நமக்கென்ன பாதி கிணறு தாண்டியாயிற்று; மீதி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிழல் கூடப் படாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்தான்.... ஆனால், அப்படியே விட்டுவிடுவது ஒரு எஸ்கேப்பிசம். உலகத்தின் மொத்த வறுமையையும் இட்டு நிரப்ப முடியாமல் போகலாம் ஆனால், பசித்த ஒருவருக்கு உணவிட முடியும் அல்லவா!! அதுபோலத்தான், எல்லா அப்பாக்களையும் (அப்பாவாக இன்னும் மாறாதவர்களையும்) மாற்ற முடியாமல் போகலாம். ஆனால், ஓரிருவர் மாறினாலும் உலகம் கொஞ்சம் சுத்தமாகும், கொஞ்சம் ஒளியேறும், கொஞ்சம் சிறக்கும் என்ற பேராசை எனக்கு.
கார்ப்பரேட் நிறுவனங்கள், சக மனிதர்களை சமமாக நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளன. சரியானபடி நடந்து கொள்ளாவிடில் வேலை போய்விடும் என்ற பயமும் ஒரு காரணம் என்றாலும், புரிதலும் முக்கிய காரணம். எனவே, வளையக்கூடிய ஐந்து வயது சிறுவர் சிறுமிகளுக்கும், தேடலோடு இருக்கும் பதின்ம வயதினருக்கும், மாறும் திறன் இன்னும் மரித்துப் போகாத மனிதர்களுக்கும், சக மனிதர்களை மரியாதையுடன், அன்புடன், மனித நேயத்துடன், நடத்த பாலினமோ, மொழியோ, நாடோ, தோலின் வண்ணமோ, இன்ன பிற வேறுபாடுகளோ தடையல்ல என்று சொல்லித் தரவேண்டியது, இந்த காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவை. இந்தக் கல்வி, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும், (மகனையோ மகளையோ பெற்ற) பெற்றோர்களுக்கும் தேவை; அப்பாக்கள் மாற அனைவரும் படிக்கவேண்டியிருக்கிறது.
நம்முடைய அடுத்த அறப்பணி இந்த நோக்கத்தை நோக்கி நகரும்!!! ஆற்றலும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தெரிவியுங்கள்.
பிற்குறிப்புகள் :
- நண்பர்கள் என்பது பொதுவான சொல். பாலினம் சார்ந்ததல்ல.
- தன் எண்ணத்தை, செயலை, மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே, புதிதாகக் கற்றுக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே முதியவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!!! அப்படி, வளைய முடியா வயதில் இருப்பவர்களை, தண்டிப்பது அல்லது தவிர்ப்பது மூலம் மாற்ற வேண்டியதுதான்.--- உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை!!
Wednesday, October 30, 2024
அக்கினிக்குஞ்சு
- இதில் யாரைச் சொல்ல.... இத்தகைய ஆண்களைப் பெற்று வளர்த்த அன்னையரையா!!! அறம் வளர்க்கும் தந்தையரையா!! சமூகத்தையா!!!
- உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனும், உலகம் யாவையுந் தாமுள வாக்கியவனும் கூட இதில் விலக்கில்லை!! மகுடம் பறிக்கப்பட்ட போதுகூட சித்திரத்துச் செந்தாமரையாக இருந்தவன், சீதையிடம் மட்டும், தன் முத்துமாலை கருகும் வண்ணம் கோபப் பெருமூச்சு விட்டானாம்!! எல்லைநீத்த உலகை என் சொல்லால் சுடுவேன் என்றவள் வாளாவிருந்தாளாம்!! முத்துக்கள் நல்லவையானால் தீயில் கருகாது! அப்பேற்பட்ட முத்தே கருகியதென்றால், எத்தனை சூடான மூச்சு அது!! முத்து போலியா, உலகம் யாவையுந் தாமுளவாக்கியவன் போலியா, செந்தாமரை போலியா… தெரியவில்லை!!
- மானம் நீப்பின் உயிர் வாழா தசரதனும், போரில் இணையாக நின்ற கைகேயியிடம் அடுத்த மன்னன் குறித்த முடிவைக் குறித்துப் பேசவில்லை. பேசுவதை விடுங்கள், சொல்லக் கூட இல்லை. ஊரெல்லாம் அடித்த பறை கேட்ட சேடி வந்து சொல்லி, சாவகாசமாகத் தெரிந்து கொண்டாள்!! ஆஹா, இத்தனை "அதிகாரம்" ஒரு அரசிக்குப் போதாதா என்ன!! அறம் தவறினால் மானம் நிற்குமா என்ன? இசையும் நிற்கும், வசையும் நிற்கும் (இசை என்ற சொல்லுக்கு, புகழ் என்று பொருள் கொள்க) என்பது புறநானுறு. ஆனால், இந்தக் கதை இன்றும் கைகேயியின் வசையாகத்தான், தசரதனின் இசையாகத்தான் நிற்கிறது. அனைத்து வசைக்கும் காரணம் தசரதன் அல்லவா !! ஆனால் அந்தக் கவரிங் மானோ கவரிமானாகிவிட்டான்!! காலக்கொடுமை!!
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து!! அச்சாணிக்குப் பதிலாய், தன் கை கொடுத்தவள் கதியே இவ்வளவுதான்! பிறர் கதி என்ன!! உருவில் மட்டுமே ஒற்றை (அல்லது இரட்டை) வேற்றுமை... அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இத்தனையையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறானே, பரந்து கெடுக உலகியற்றியான்....
- நவீன காலத்தில் கதையொன்றும் மாறிவிடவில்லை!! இன்றும், தன் மனைவி சம்பாதிக்கும் பொருள் வேண்டும், அவள் தரும் அறிவார்ந்த நுட்பங்கள், தன் வேலையைச் செப்பம் செய்வதற்கு வேண்டும்; ஆனால் குடும்பம் குறித்த முக்கிய முடிவெடுக்கும் போது, அவள் இருக்கவேண்டியதில்லை, அவளிடம் பேசவோ, சொல்லவோ வேண்டியதில்லை. சொன்னால், அவள் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! சொல்லாவிட்டால் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! நமக்கென்ன, யார் / எது எப்படிப் போனாலும், வசை அவளுக்குத்தானே! நாம், நம்பாட்டுக்கு, மீதி அறுபத்து நாலாயிரம் பேரில், யாரிடமாவது, எந்த சோசியல் மீடியவிலாவது, கதைத்துக் கொண்டிருக்கலாம்!!! ஆஹா... எந்த காலத்திலும் தசரதனாய் இருப்பது எத்தனை எளிது...
- எல்லா மதங்களும் பெண்களைத்தான் கல்லெறியச் சொல்லி சட்டம் இயற்றின... "அறம் மீறிய" ஒரு பெண்ணை, கருணையே வடிவான, நீதியை நிலை நிறுத்தும் வல்லமை கொண்ட கடவுளின் மகனும் கூட, தந்திரமாகத்தான் விடுவிக்க முடியும்! அவளுடன் பரத்தைமையில் சேர்ந்து நின்றவன் உங்களில் யாரடா என்று கேட்டுவிட முடியாது!! கடவுளே கேட்கவில்லையென்றால், சாதாரண மனிதர்கள் கேட்கத் துணிவார்களா என்ன... ஒற்றையாடையிலிருந்த பெண்ணைத் துகிலுரியும் போது கேட்கத் துணிவற்றுப் போனது பீஷ்மர் மட்டுமா? நாடே நெட்டை மரமாகத்தானே நின்றது!! அரசுடன் / அரசனுடன் சம்பந்தப்பட்டவனை, நமக்கு வேண்டிய சகாயம் செய்பவனை, அத்தனை சீக்கிரம் கேட்டுவிடுவார்களா!! நம்முள் நக்கீரர் யார்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் வேண்டும்!! அப்படி அறம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்கள்!!
- இந்த அழகில், உன்னுள் கடவுள் இருக்கிறார், தேடு என்றோ/ நீயே கடவுள் என்றோ சொன்னால் எந்தப் பெண்தான் அந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கி தபஸ்வினியாவாள்? இத்தகைய "conditioning"-ஐ உடைத்து நிமிர்ந்ததால்தான், மற்றவரைவிட, காரைக்காலம்மை உயர்வு!! அக்கா மஹாதேவி உயர்வு!! இது கூடப் புரியாமல் போயிற்றே சேக்கிழாருக்கு!!
- இதற்காக உலகை எரித்துப்போடவா முடியும்… மன்னன் பிழைக்கு, முலையைத்திருகி எறிந்து, மதுரையை எரித்த கண்ணகி போல்! மன்னன் மட்டுமல்ல எல்லோரும்தான் பிழைபட்டார்கள் என்ற வாதம் இங்கேயும் செல்லுபடி ஆகும்தானே… இன்னும் சொல்லப்போனால், எல்லோரும் அதிகப் பிழைபுரிய, ஓரிருவர் கணக்கு மட்டும் சற்றே குறைவாக இருப்பதால், உலகை எரித்துப் போடுவதில், ஒன்றும் தவறில்லைதான்!! அதுதான் அந்தப்பணியை சிரமேற்கொண்டு, உலக நாட்டு அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் பொறுப்பேற்று செவ்வனே செயலாற்றுகிறார்களோ!!
Saturday, June 22, 2024
அமையாது உலகு
கேள்விகளே நம்மை வழிநடத்துகின்றன!!! எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கொஞ்சம் மங்கித்தான் போய்விடும் போலும். கொஞ்சம் குறைவதென்ன... கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்...
Friday, January 12, 2024
அம்புப் படுக்கை
- சகோதரர்களுக்குத் துரோகம் இழைத்த துரியோதனன் பக்கம் நின்ற பிழை ஒரு அம்பு;
- திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்க வாய்ப்புகள் இருந்தும், (அரசு பதவியின் வசதிகளை நினைத்து அல்லது பாசத்தின் காரணமாக) தட்டிக்கேட்காமல், வாழாவிருந்தது ஒரு அம்பு;
- தவறென்று தெரிந்தும், முட்டாள்தனம் என்று தெரிந்தும், தம்பிகளுக்காக, அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற பெண்களின் விருப்பத்திற்குப் புறம்பாக, தம்பிகளுடன் சேர்த்துவைக்க முயற்சித்தது ஒரு அம்பு
- துரியோதனாதிகளும் பாண்டவர்களும் ஒரேவிதமான உறவென்றாலும், துரியோதனனுக்காக யுத்தம் புரிந்தது ஒரு அம்பு; வில்லை வெட்டி எறிந்து விட்டு வெளியேறிய விதுரனைப் போல் அல்லாமல், அறமற்ற துரியோதனனுடன் நின்றது ஒரு அம்பு...