Monday, September 4, 2017

கறை

நூற்றுமுப்பது கோடியில் ஒன்றிரண்டு குறைந்தாலென்ன, குடியா முழுகிவிடும்? என்ன பெரிய நஷ்டம் நாட்டுக்கு? நீலத்திமிங்கலத்துக்கு இரையானோர்பற்றி என்ன சொல்வதுவிளையாட்டுகள் வினையாய் முடிவது ஒன்றும் புதிதில்லையே! எத்தனையோமுறை பெற்றோரும் ஆசிரியர்களும் சொன்னால் கேட்காதவர்கள் முகம்தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு உயிர்விடும் அவலத்தை என்ன சொல்ல!! வலைதளத்தில் நல்ல கருத்துக்கள் பல கிடைத்தும், அறிவு வளர்க்கும் பல விளையாட்டுகள் இருந்தும் தானே தேடிப்போய் உயிர்விடுவோர் குறித்து வருந்துவதில் பயனேதும் உண்டோ!

ஆனால் விருட்சமாய் வளரவேண்டிய விதையொன்று வீணாய்ப்போயிற்றே! என்ன விதமாய் அதைத் தடுத்திருக்க முடியும்? ஒருவேளை என்போன்றோருக்கு மூளையிருந்தால் அரசியலில் ஈடுபட்டிருப்போமோ, தமிழகத்தின் தலைவிதியைமாற்றியிருப்போமோ? ஒருவேளை முதுகெலும்பிருந்தால் அரசுப்பணியேற்று சரியான முடிவுகளைநோக்கி தலைவர்களை நகர்த்தியிருப்போமோ? ஒருவேளை அறிவிருந்தால்  இப்படி ஒருநிலை வரும் என உணர்ந்து உங்களை தயார் செய்திருப்போமோ? ஒருவேளை கண்ணிருந்தால் இழிவுற்ற கல்விமுறை கண்டு கொதித்திருப்போமோ, செயலில் இறங்கியிருப்போமோ? ஒருவேளை மானமிருந்தால் ஏற்கனவே செரித்த உணவை உண்ணும் இழிநிலையில் நாடிருப்பதுகண்டு அறப்போர் தொடுத்திருப்போமோ? இப்படி எதுவுமே இல்லாமல், விலங்குகள்போல, வெறுமே உண்டு உறங்கி ஜனத்தொகைபெருக்குவது மட்டுமே கடனென்று வாழும் சமூகத்தில் வாழப்பிடிக்காமல் போனாயோ கண்ணே!

ஒருவேளை என் மகளாய் நீ பிறந்திருந்தால் உன் மன உரம் வளர்த்திருப்பேனோ? வானூர்தியியலில் விண்ணைத்தொடும் வாய்ப்பு கிடைத்தும் உன்னுயிர் பிரிந்துபோகாமல் காத்திருப்பேனோ? 1999-2000 வருடத்தில் நீ பிறந்தது காரணமா? அதற்கு முந்தைய வருடம் பிறந்திருந்தால் நீ பெற்ற மதிப்பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு மிக எளிதாய் கிடைத்தருக்குமே! தமிழகத்தில் பிறக்காமல் வேறெங்கோ நீ பிறந்திருந்தால் உன் கல்வி முறை இயல்பாகவே வேறாயிருந்திருக்கும் உன் விதியும் வேறாயிருந்திருக்குமே கண்ணே!


தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற மொழி பொய்யாய்ப் போயிற்றே! எங்கள் செயல்திறமின்மை உன்தீதாய் விடிந்ததே! நாம் இன்று நமது பிறப்புரிமையென்று நினைப்பவையெல்லாம் நம் முன்னோரின் கடின உழைப்புக்குக்கிடைத்த பரிசுவரலாறு கற்பது இந்தப் பரிசை, பரிசின் மேன்மையை உணர்வதற்காகவேயென்று சொல்வதுண்டு! கல்வி உனது பிறப்புரிமையாய் இல்லாமல் போனதால் உன் முன்னோர்களாகிய நாங்கள் வெட்கித் தலை குனிகிறோம்! வரலாறு எங்கள் பக்கங்களை கருப்பாகமட்டுமே இனம்காணும்! எப்படிக் கழுவிக்கரைப்போம் இந்தக் கருப்பை? கறையை?

2 comments:

balamanikandan said...

Very true...

Unknown said...

Really... but try to change...