Sunday, January 22, 2017

இனியொரு விதி செய்வோம்!

கொட்டும்பனியையும், கடுங்குளிரையும், பெய்யாமல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருக்கும் நண்பர்களே, உங்கள் மன உறுதியையும் தெளிந்த அறிவையும் வியக்கிறோம் போற்றுகிறோம். உலக அளவில், நம் தமிழ்ச்சமூகம் நசித்துப்போய்விட்டதோ, நியாய தர்ம சிந்தனையற்றுப்போய்விட்டதோ என்ற மனச்சஞ்சலத்திலிருந்த என்போன்ற பலருக்கு இந்த எழுச்சி மனநிறைவைத் தந்திருக்கிறது, வாழ்வின்மீது ஒரு நம்பிக்கை தந்திருக்கிறது. "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை, கண்ணீரால் காத்தோம்! கருகத் திருவுளமோ?" என்ற கலக்கத்தைக் களைந்திருக்கிறது. மிக்க நன்றி நண்பர்களே!

நமது இந்த எழுச்சி இத்தோடு நின்றுவிடக்கூடாது. இந்த மண்ணுக்கான நம் கடமைகள் இன்னும் பல நமக்காகக் காத்திருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்காக குரலெழுப்புவதோடு செயலில் இறங்குவோம் வாரீர்! தீதும் நன்றும் பிறர் தர வாரா! நம்முள் இருந்த சில தவறுகள் நம்மைச்சிறைபிடித்துள்ளன. சிறைமீள நாம் சீராக இயங்கவேண்டும். ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற சிந்தனை மாறவேண்டும். மேலே விழுந்து பிடுங்கவில்லையென்று நாம் நினைத்த நரிகள் செய்யும் நாட்டாமையைத்தான் இன்று பார்க்கிறோம். அவர்களால் சிதையுண்டுபோகுமோ என்றுபயந்த தேசத்தை மீட்டெடுக்கமுடியும் என்ற நம்பிக்கை தந்ததற்கு நன்றி நண்பர்களே! எங்கள் இதயங்கள் பெருமையில் விம்முவதை விவரிக்க வார்த்தைகளேயில்லை!

இருபெருநகரங்களில் அணுகுண்டுகள் விழுந்தபோதிலும், இளைஞர்கள் இல்லாமல்போனபோதிலும் வீறுகொண்டு ஒரு தேசம் எழமுடியுமாயின், அரசின் அலட்சியமும் அதிகாரப்போக்கும்கண்டு வெகுண்டெழுந்த இந்த இளைஞர்கூட்டம் இந்த தேசத்தை மீட்டெடுக்க முடியாதா? தமிழெனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது வெற்றுமுழக்கமாகவிடுமோ இந்த வீரர் கூட்டம்! நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னரன்றோ!! இதுவரை அரசாண்டவர்கள் பிழைபுரிந்திருக்கலாம்! நாம் பிழையாய்போகலாகாது! நல்ல படை, நல்ல குடிமக்கள், நல்ல உணவுப்பொருள்கள், நல்ல அமைச்சர்கள், அண்டை நாடுகளுடனான நட்பு, சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட நாட்டை உடையவனே நல்ல அரசன், அரசருள் சிங்கத்தைப்போன்றவன், தன்னிகரற்ற காளையைப்போன்றவன். இவை ஆறையும் கைகொள்ள வேண்டாமா! வாருங்கள் நண்பர்களே! செயலில் இறங்குவோம்!

நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உறுதியாக நிரூபிப்போம்!! அதற்கு நமக்கு இந்த ஆறும் வேண்டும்! நாம் ஒரு நல்ல படை என்பதை நிரூபித்துவிட்டோம். ஒரு நாட்டின் பலம் அதன் படைகள்! ஒரு படையின் பலம் அதன் கட்டுக்கோப்பு!! நம்மால் இத்தனை கட்டுக்கோப்பாக, எந்த வன்முறையுமின்றி, சீராக இயங்கமுடியுமென்றால் இந்த தேசத்தை தூக்கி நிறுத்த நம்மால் முடியும். நமது எல்லைகளை விரிவாக்குவோம்! நமது வேலைகளை எல்லையில்லா தூரம் விரிவாக்குவோம்! மீதி ஐந்தையும் மீட்டெடுப்போம்!

நல்ல குடிமக்களாக நாம் இருப்பது மிகவும் அவசியம். நமது தற்போதைய அரசுகள்  மதுவிற்பதை மும்மரமாகச்செய்கின்றன. நம் திரைப்படங்கள் மது அருந்துவதை இயல்பானதாக, மகிழ்ச்சியானதாக, துன்பம் களைவதாகக் காட்டுகின்றன. ஆனால் நல்ல குடிமக்கள் நல்ல சிந்தனையோடு, நல்ல சொற்களோடு, நல்ல செயல்களோடு இருத்தல் அவசியம் என்பதை கடந்த ஒன்பது நாட்களாக உரத்துப்பறைசாற்றியவர்கள் நீங்கள்! மதுவைத்தொடாமல் இருந்தவர்கள் நீங்கள்! பெண்களை, குழந்தைகளை, முதியவர்களை கண்ணியமாக நடத்தியவர்கள் நீங்கள். இந்த கண்ணியத்தை, சுயஒழுக்கத்தை எந்தநாளும் காப்போம்!! நமது கடமைகளிலும் நேர்மையைக் கடைபிடிப்போம்! லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்போம், ஒழிப்போம்! வோட்டுக்குப் பணம் வாங்கும் மடமையைக் கொளுத்துவோம்! வோட்டே போடாமல் வீட்டுக்குள் இருந்து வெட்டிக்கதை பேசுவதை அறவே ஒழிப்போம்!

நல்ல உணவு வேண்டுமெனில் நமது விவசாயம் உயிர்த்து எழவேண்டும். அதற்கு விவசாயிகளோடு நாமும் இணையவேண்டும். ஏர்பூட்டி எல்லோரும் உழவேண்டும் என்பதில்லை. உழவுக்கு நமது வேலை எப்படி உதவமுடியும் என்று சிந்தித்து செயல்படுவோம்நமது குளங்களைத் தூரெடுப்போம், மரம் நடுவோம் மழை பெறுவோம். சிறுதுளி பெருவெள்ளம். ஒருதுளி நீரையும் வீணாக்காமல் விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் கொண்டுவர பொறியியலார்கள் முயலவேண்டும். விளையும் பொருட்களை சேமிக்கவும் சரியாக சந்தைப்படுத்தவும் அறிவியல் கற்றோரும் வணிகம் கற்றோரும் முன்வரல் வேண்டும். விளைந்த பொருட்களை கலப்படமில்லாமல் விற்க வியாபாரிகள் முன்வரவேண்டும்! நீங்கள் எத்தனை பெரிய செல்வந்தராயினும் ஒருகவளம் உணவையும் வீணாக்காதிருத்தல் வேண்டும்நாம் நேற்று வரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்! ஆனால் இன்றுமுதல் உறுதியேற்போம்! நமது விவாசாயமுறைகளைச் செம்மைபடுத்துவோம்; இயற்கைமுறைகளையும்  நவீனஅறிவியலையும் முறையாய்ப்பயன்படுத்துவோம்! எதிலும் நேர்மை காப்போம்!

நமக்கு நாமே அமைச்சர்கள். ஒரு அமைச்சரின் மதிநுட்பத்தோடு செயல்படுவோம்! வள்ளுவன் சொல்லாத அமைச்சியல் இல்லை. அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே அமைச்சராக முடியும். இந்த திறமைகளை வளர்த்துக்கொள்வோம். அறமறிந்தோரை, நேர்மையாளரை மட்டுமே அமைச்சராகத் தேர்வு செய்வோம்!

நமது நட்புகள் சரியானதாய்ப் பார்த்துக்கொள்வோம். கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கான உதாரணங்களைக் கண்கூடாகக்கண்ட தலைமுறையிது! அவற்றிலிருந்து பாடம்கற்போம்! நமது நாட்டின் அரண் காப்போம்! இனியொரு யுத்தம் வந்தால் அது வெறும் வாளாலோ துப்பாக்கியாலோ இருக்காது நண்பர்களே! நமது அறிவு வளத்தை, நமது தொழில் நுட்பத்தை, நமது தகவல்களைத் தகர்க்கும் இணையயுத்தம்தான் நடக்கும்! தகவல் தொழில்நுட்பம் ருபுறமும் கூரிய வாள்! நம்மை எவ்வளவு இணைக்கிறதோ அதேஅளவுக்கு நம்மைக் கண்காணிக்கவும் செய்கிறது, நம்மைப்பற்றிய தகவல்களை மிகஎளிதாக பிறர் கவர்ந்துகொள்ளமுடியும், நாம் கவனமாக இல்லாவிட்டால்! எனவே சிந்தித்து சரியான முறையில் உபயோகிப்போம், நம்மைக் காத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் படைப்போம்!

அதுமட்டுமல்ல நண்பர்களே, நமது சமுதாயம் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் களைவோம்! மதுவை ஒழிப்போம்! சாலை விதி மதிப்போம்! சுற்றுபுறத்தைத் தூயதாய்க் காப்போம். நமது வேலைகளை திருந்தச்செய்வோம் - படிப்பாயினும் சரி, விளையாட்டாகிலும் சரி சிறப்பாய் செய்வோம்! கடனுக்காகச் செய்வது தவிர்த்து கடமையைச் செய்வோம். நமது சாலைகளை, நமது ஊர்களை நாமே சீரமைப்போம்.

நீங்கள் என்ன படித்தவராயினும் சரி, உங்கள் சேவை இன்று நாட்டுக்குத் தேவையாயிருக்கிறது. உடனடி தேவைகள் மட்டுமல்ல, நீண்டகால திட்டங்களுக்கும் உங்கள் திறமையும் ஆற்றலும் தேவையிருக்கிறது!

வேதி பொறியியலார்களே!! கனிம பொறியியலார்களே!! மணலுக்கு மாற்று கண்டுபிடித்து நம் நதிகளைக் காப்போம்!! வானிலை பொறியியலார்களே!! கணிப்பொறியியலார்களே!! மழை வருவதைச் சரியாய்க் கணிக்க கருவி செய்வோம்! பயிர்வளம், உயிர்வளம் காக்கத் தேவையான கருவி செய்வோம்பொறியியலார்களே!! வாழ்வை எளிதாக்க கருவிகள் செய்வோம்! இன்னும் எத்தனை நாளைக்கு வேற்றுநாட்டின் தொழில்நுட்பத்தைக் கடன்வாங்கிக் காலம் கழிக்கமுடியும்?

மருத்துவர்களே!! நம் மனிதர்களைக் காக்க எளிதான வழி காண்போம்!! உங்கள் மருத்துவமனைகளில் வழியும் கூட்டத்தைச் சரியாக நிர்வகித்து மனிதர்களின் நேரம் காப்போம்! அவர்கள் காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் நாட்டுக்கு விரயம் என்பதை உணர்வோம்!

இலக்கியவாதிகளே!! நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்ல வழிவகை செய்வோம்! வள்ளுவன் சொல்லாத மேலாண்மை பாடமில்லை! பூங்குன்றன் பாடாத வாழ்வியல் இல்லை! ஆனால் அவை ஏதோ புதிதாய்க் கண்டறியப்பட்டது போல புகட்டப்படுவதைத் தடுக்க ஒரே வழி, வேறு வழியில்லாமல் தமிழ் கற்பதை விடுத்து, தேமதுரத்தமிழின் திறனுக்காகக் கற்போம், கற்பிப்போம்! பிறமொழியில் வரும் நல்ல படைப்புகளை தமிழுக்குக்கொண்டுவருவோம்!

வரலாற்றாளர்களே!! இன்னும் எத்தனை நாள் வேற்றுநாட்டாரின் பார்வையில் எழுதப்பட்ட நம் வரலாற்றைக் கற்போம்? இம்மண்ணின் பெருமையை ஆராய்ந்தறிவோம்! நாம் செய்த வரலாற்றுத்தவறுகளையும் நம் வருங்காலச்சந்ததிக்குச் சொல்வோம்! அவர்கள் அந்தப்பிழை செய்யாமல் தடுக்க உதவுவோம்!

சட்டவல்லுநர்களே, நியாயத்தின்பக்கம் மட்டுமே நிற்க வாருங்கள்! எல்லோருக்கும் சட்டம் தெரிய வழிவகை செய்வோம்!!

வியாபாரிகளே கலப்படமில்லா பொருள் விற்போம்! நமது தேச நலன்காப்போம்! தரமானபொருட்களை சரியான விலையில் விற்பதே உங்கள் புனிதப்போர்!

அரசு மற்றும் தனியார் ஊழியர்களே! ஒவ்வொரு மணித்துளியும் வீணாக்காமல் சீராய் உழைப்போம் வாருங்கள்! இதோ கடற்கரையிலும் மைதானத்திலும் கூடிப்போராடும் நம்குல இளைஞர்களுக்கு நாம் வழிகாட்டியாவோம்! அவர்கள் நம்மைப் புறக்கணிக்காமலிருக்கவேண்டுமென்றால் அதற்கு நமக்கிருக்கும் ஒரேவழி நேர்மையான சீரான உழைப்பு மட்டுமே!

நண்பர்களே! இன்று உலகமே திரும்பிப் பார்க்கிறது! இப்படிக்கூட ஒரு போராட்டம் நடக்கமுடியுமா என்று அதிசயப்படுவோரும், இவர்கள் இதை இப்படி நடத்திக்காட்டிவிட்டார்களே என்று பொருமுவோரும், இதுவும் கடந்து போகும் இந்த இனம் சறுக்கும் என்று காத்திருப்போரும் ஏராளம்! நம்மைப் பார்த்து மூக்கின்மேல் வைத்தவிரல்கள் தலையிலடித்துக்கொள்ளாமலும், இதற்குத்தானா இத்தனையும் என்று ஏளனம் செய்து சீட்டியடிக்காமலும் இருக்கவேண்டுமென்றால்  நமது இந்த கோபத்தை நல்லவழியில் செலுத்துவது ஒன்றே வழி! பிறருக்காக இல்லாவிடிலும், ஒன்பது நாட்களாய் (இன்னும் எத்தனை நாட்களோ) வெயிலிலும் பனியிலும் மழையிலும் நாம் நிற்பதற்குப் பலன்! நம்மோடு நிற்பவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு!


இனியொரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! நேர்மையும் சுயஒழுக்கமுமே நமது பலம்! அதை எந்த நாளும் தொடர்வோம்! சொல்லாலும் செயலாலும் நேர்மை காப்போம்!!  ப்போதும்!  எப்போதும்!

No comments: