Thursday, December 15, 2016

மரணப்படுக்கையிலும்...

ஒவ்வொரு மரணமும் ஒரு உந்துதலை விட்டுச்செல்கிறது! நமது கருத்தொத்த சிந்தனைகள் கொள்ளாதவராயினும், முரண்பட்ட செயல்களுடையவராயினும் வாழும்நாளில் நம்மால் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டவராயினும், ஏனோ எல்லா மரணங்களும் ஏதோ ஒரு ஊக்கத்தை, செயல்குறிப்பை அத்தோடு ஒரு வெறுமையை மனதில்விதைத்துத்தான் செல்கின்றன!

விடுமுறைக்கு போட்டுவைத்த திட்டங்கள் மிக எளிதாகக் காலாவதி ஆகிவிட்டன! மீண்டும் ஒரு எண்ணக்கோர்வை! (கட்டுரைகளை முழுதாய் எழுதும் எண்ணமும் நேரமும் இல்லாமல் இப்படி சிதறல்களையும் கோர்வைகளையும் தெளிக்கும் மனோபாவம் விரைவில் மாறும் என்று நம்புவோம்!!!)

  • என்றோவாங்கிவைத்த  வைரமுத்துவின் தமிழுக்கும் நிறமுண்டு இன்று வாசிக்கக்கிடைத்தது தற்செயல்தான் என்று உறுதியாய்க் கூறமுடியவில்லை! "மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற அவரது கவிதை இந்தத்தொகுப்பில் இருக்கும் என்று நான் அறிந்திராததால் தற்செயலென்றுகொண்டாலும் பிழையில்லை! மரணப்படுக்கைமட்டுமே ஒன்றாயிருப்பதுவும் விதியின் கோலம்தான்போலும்! காலம் கொன்றுபோட்ட உணர்வுகள் எத்தனை! காலத்தைக் காரணமாய்க்காட்டி மனிதர்கள் கொன்றுபோட்டவை எத்தனை!

  • வைரமுத்துமட்டுமல்ல சுஜாதாவும் மனதுக்குள் வந்துபோனார்! வயோதிகம்குறித்த தன் கட்டுரையில் தினமும் Obituary பார்ப்பதாகவும் அதில் இறந்தோர் வயதைக்கவனிப்பதாகவும் குறித்திருந்தார்! என் மனமோ தனி மனிதர்களைப் பார்க்கிறது. கலாமின் மரணத்தின்போதும் சரி ஜெயலலிதாவின் மரணத்தின்போதும் சரி, கடைசி நிமிடத்தில் சரியான விதமாக நடத்தப்பட்டார்களா என்ற கேள்வி உள்ளோடிற்று! பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்ததது சரியான உவமை, வெற்றுக்கற்பனையில்லை என்றேதான் நினைத்திருக்கிறேன்! உடல் செயலிழந்தும் உயிர் பிரியாதிருத்தல், தனி மனிதர்களுக்கு அம்புப்படுக்கை போன்றதே, அது பீஷ்மராகவேயிருந்தாலும் சரி! சாதாரணர்கள் நிலை சொல்லுந்தரமன்று! அம்புபடுக்கையில் விழாதிருக்க ஆரோக்கியத்தைக்காக்கத் தேவையான உடல்பயிற்சிகளையும் உணவுமுறைகைளயும் இன்னும் தீவிரப்படுத்துவது இந்த மரணங்கள்தான்!

  • புகழும், செல்வமும், ஆள்பலமும், அதிகாரபலமும் அம்புப்படுக்கையிலிருந்து நம்மைக்காக்கும் வலிமையற்றவை! ஆனால் இவையில்லாமல்போனால் அம்பின் வீர்யம் இன்னும் அதிகமிருக்கும்!

  • நதியில்விழுந்த இலையாய் நகர்வதற்கும் அம்பில்விழுந்த இலையாய்க்கிழிவதற்கும்  கர்மவினையல்லாமல் வேறேதேனும் விளக்கமுண்டா!

  • ஊக்கத்துடன் செயல்பட, முன்னேற்றம் அல்லது மாற்றம்குறித்துச்  சிந்திக்க சமூகம் குறித்த "நல்ல கோபம்"  (Creative Discontent)  வேண்டும் என்பது திரு. அமர்த்தியா சென் அவர்களின் வாதம். எனக்கென்னவோ சமூகம் குறித்த கோபங்கள் / வருத்தங்கள் மட்டுமே காரணமில்லை என்று தோன்றுகிறதுதனிப்பட்ட கோபமும் வருத்தமும்கூடக் காரணமாகக்கூடும்! மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமலிருக்க ஏதோ ஒரு வலி வேண்டியிருக்கிறது! கருமமே கண்ணாயிருக்க எவ்வெவர் தீமையோ தேவையாயிருக்கிறது! செவ்வி அருமைபாராமலிருக்க ஏதோ ஒரு அவமதிப்பின் தேவையிருக்கிறது! நீதிநெறி விளக்கம் என் எண்ணஓட்டத்தோடு முரண்பட்டு நிற்பதாய்ப்படுகிறது !

  • ஒரு ஆணின் வெற்றியின்போதோ அல்லது மரணத்தின்போதோ அவர் ஒரு ஆண் என்பது தனியாய் குறிப்பிடப்படுவதேயில்லை! ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றாலும்சரி இறந்து போனாலும்சரி அவர் ஒரு பெண் என்பதை நினைவூட்ட மறப்பதேயில்லை! வேலைசெய்யும்போது மூளைதவிர பிற பாகங்கள் நினைவிலிருப்பதில்லை என்பதையும், இப்படி தனியாய்க்  குறிப்பிடப்படுவதை பெரும்பாலான பெண்கள் ரசிப்பதில்லை - இன்னும்சொல்லப்போனால் வெறுக்கிறார்கள் என்பதையும் உலகம் எப்போது புரிந்துகொள்ளும்? பெண்ணாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றார் என்ற வாக்கியம் பெரும்பாம்பாலும் ஒரு எரிச்சலைத்தருகிறது! "இயலாமையைத்தாண்டி" என்ற தொனிதான் காரணம். ஊனமுற்றவர்களை மாற்று திறனாளி என்று பெயரளவில் மாற்றிவிட்டு "முடவன்" என்றழைக்கும் பரிகாசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருப்பது போலத்தான் இதுவும். சரியாகச்சொன்னால் இது இன்னும் இழிவு!! பெண்ணாயிருப்பது ஒரு குறைபாடா என்ன? ஒரு குறைபாடுபோல் சித்தரிப்பது ஆணவத்தின் உச்சமாக பெண்களால் உணரப்படுகிறதென்று எப்போது இவர்களுக்குப் புரியும்?


  • இறக்கும்வரை வெறுக்கப்பட்டவர்கள்கூட இறந்தவுடன் நல்லவர்களாய் சித்தரிக்கப்படுகிறார்கள்! இறந்தபின் ஒருவரது நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்டுவோர், இருக்கும்போது தவறுகளைத் தேடிப்பிடித்து திட்டுவதேன்? இருக்கும்போதே  நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்ட முடியாதா? விமான நிலையத்தில்  காட்டும் அன்பு போலத்தான் இதுவும்!


  • நன்றாக மரிப்பதென்பது நன்றாக வாழ்வதின் மறுபக்கம்தானன்றோ! மரித்தபின் மறுவாழ்வு இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் உற்சாகமாய் உத்வேகமாய் வாழ்ந்திட்டால் மரணப்படுக்கையில் நினைவுகூற நிறைவிருக்கும்! குறையோடு இறக்கும் ஆன்மா மறுபடி பிறக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு! ஆனால் எனக்கென்னவோ அப்படி chance எடுக்க பயம், ஒருவேளை அப்படி பிறக்கமுடியாதென்றால் அந்தகுறைகள் என்னவாகும்!! எனவே தீவிரமாய்மனநிறைவாய்  வாழ்வது நலம்! மரணப்படுக்கையில் நிறைவாய் நினைவு கூற!...

No comments: