பாரதி போல இன்னொரு கவிஞன் பிறப்பதும், பிறந்தாலும் அவரெழுதும் கவிகள் எனக்கு வாசிக்கக் கிடைப்பதும், வாசித்தாலும் நான் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதுவும் நடவாத காரியம் என்றே தோன்றுகிறது! எத்தனை தேவையற்ற சிந்தனைகள் நம் நேரத்தைக்கெடுக்கின்றன என்ற எண்ணத்துடன் பாரதியைப்புரட்டியபோது வாசித்த கவிதைகள் இவை!
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்:
“தம்பிரானே இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்” என்றேன்.
புன்னகைபூத் தாரியனும் புகலுகின்றான்:
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்.
இந்த குப்பைகளைத்தள்ளி, நல்லது செய்து அல்லவை நீக்கி, வையத்தலைமை கொள்ள வேண்டுமாயின், பெரிதினும் பெரிது கேட்கவேண்டும்! கனவு மெய்ப்பட வேண்டுமாயின்,
மனதி லுறுதி
வேண்டும்
வாக்கினிலே
யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
பாரதி சொல்வதுபோல்,
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளீ!
No comments:
Post a Comment