Monday, April 18, 2016

அருளாய் சிவனே!

இன்னும் சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மாணிக்கவாசகரை வாசிப்பதில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்! இந்த பாடல் வரிகளைப் படித்தபின்தான் அப்படி ஒரு முடிவு!!

அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு
   ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்;
   போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க,
    என் செய்கேன்? `இது செய்க' என்றுஅருளாய்;
சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ்
    திருப்பெருந்துறை மேவிய சிவனே!

உடல் துண்டாக்கி அறுத்துக்கொள்ளப்போவதில்லை; தீயில் புகுந்து மாயவும் போவதில்லை; ஆனால்இந்த உடலை என்ன செய்வதென்று தெரியவில்லை, போக்கிடமும் அறியேன், இறக்கவும் இல்லை; இனிதாய் இருக்க என் செய்வேன் என்றும் தெரியவில்லை; இது செய் என்று அருளாயோ இறையே என்று கேட்கும்வண்ணம் அவரைத் தூண்டியது எது? இறைபக்தியால்மட்டுமே ஒருவர் இப்படிக் கேட்கக்கூடுமோ? பல்வேறு பாதைகளில் ஒன்றை தேர்ந்தேடுக்கவேண்டியிருந்தாலோ அல்லது பாதையே தெரியாமல் இருந்தாலோ இப்படித்தோன்றும்! குறிப்பாக பாதைதெரியாமலிருந்தால் இப்படித்தான் தோன்றும்! பக்தி மிகுதியால் இத்தகு உணர்வு வருமேன்பதே ஆச்சர்யமாக இருக்கிறது!

பொதுவாக நம் மனநிலையை ஒத்த கவிதைகளை, கதைகளைப் படித்தாலோ பாடல்களைக் கேட்டாலோ உலகம் இனிதாய்த் தோன்றும்; நம்மைப் போல பிறரும் நினைப்பதுவும், நெகிழ்வதுவும் மகிழ்வைத்தரும். ஆனால், அடுத்தது என்ன என்ற கேள்வியோடு இருக்கும் நேரம், இந்தப் பாடல் படித்தால், யாரவது வந்து அருளாமல் என்செய்வதென்று தெரியாதோ என்ற பயம் உள்ளோடுகின்றது!


இனிதிருக்க இனி என் செய்கேன்இது செய்கஎன்றுஅருளாய் சிவனே!

No comments: