Saturday, November 9, 2024

We are moving to a new site

We are now in  https://geethasviews.blogspot.com/

அப்பாக்களுக்கு மட்டும்...

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வரிகளுடன் நா முத்துக்குமார் எழுதிய பாடலொன்று மிகவும் பிரபலமானது. என்னைப் பொறுத்தவரை மகள்களைப் பெற்ற அப்பாக்கள் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்...

மனைவியும், பிற பெண்களும் கூட யாருக்கோ மகள்தான் என்ற நினைப்பே இல்லாமல், அவர்களை, சின்னதும் பெரியதுமாய் அவமதித்த / அவமதிக்கின்ற / வருத்துகின்ற புரிதல் கூட இல்லாமல், தன் மகள் மட்டும் ஒரு ராஜகுமாரி என்று நம்பும், தன் மகளை அவள் கணவனோ, பிற ஆண்களோ நிந்திக்கும் போதும், மகள் சமூகத்தின் அவலங்களில் அல்லாடும்போதும் அங்கலாய்க்கும் தந்தைமார்கள், ஆச்சர்யமானவர்கள்தானே!!!  ஒருவேளை பார்வை குறைபாடோ, அல்லது மறதி நோயோ அல்லது வேறு ஏதேனும் மூளைத்திறன் குறைபாடோ என்று நாம் இரங்கும் அளவுக்கு ஆச்சரியம்தான்...  

பெண்கள் நைட்டி போடலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த வீடுகளில்தான், மகள்கள் அரைக்கால் சட்டைகள் (லெக்கின்ஸாகவும் இருக்கலாம்) அணிகிறார்கள் என்ற, யாரோ எழுதிய வரி அவ்வப்போது நினைவிலாடத் தவறுவதில்லை...  இதில் எந்த உடை சரி தவறு என்பதல்ல கேள்வி; அவரவர் உடை அவரவர் வசதிப்படி!!! ஆனால், தனக்கொரு வழி பிறருக்கு வழி என்று நினைப்பது பொதுவாக மனித இயல்பா அல்லது ஆண்களின் பிறப்புரிமையா என்பதுதான் கேள்வி!!! ஒருவேளை தன் அனுமதியின் பேரில் நடப்பதாக நிறைவடைகிறார்களோ என்னவோ!!! 

அந்த தந்தைகளுக்குப் புரிகிறதோ இல்லையோ, காலம் மட்டும் தன் கணக்கைத் தவறவிடுவதேயில்லை!! எப்படியாவது புரியவைக்க முயன்று கொண்டே இருக்கிறது.  ஆனாலும்  என்னவோ, அவர்களுக்கு, தாம் தம் மனையாளுக்கும், பிற பெண்களுக்கும் இழைத்த குற்றங்கள் புரிந்தபாடாயில்லை.... புரிந்தாலும், சரியானதைச் செயலாக்கத் தெரியவில்லை... புரிதலுக்கும் செயலாக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி எல்லை நீத்த பெருவெளி.... 

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மகள்களைப் பெற்ற தந்தைமார் பாக்கியவான்கள்!! பாடமாவது கிடைக்கிறது - புரிவதும் புரியாததும் அவரவர் ஞானத்தையும் பூர்வ புண்ணியத்தையும் பொறுத்தது ;-)  ;-)  மற்றவர்களைப் பெற்ற தகப்பன்களுக்குப் புரிய வைப்பார் யாரோ!! எதுவோ!! புரியவேயில்லை என்றால் செயல் எப்போது / எப்படி மாறும்!! 

மாறாது என்று விட்டுவிடக் கூடிய விஷயம்தானா இது! விட்டுவிடலாம்தான்!! நமக்கென்ன பாதி கிணறு தாண்டியாயிற்று; மீதி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிழல் கூடப் படாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்தான்.... ஆனால், அப்படியே விட்டுவிடுவது ஒரு எஸ்கேப்பிசம். உலகத்தின் மொத்த வறுமையையும் இட்டு நிரப்ப முடியாமல் போகலாம் ஆனால், பசித்த ஒருவருக்கு உணவிட முடியும் அல்லவா!! அதுபோலத்தான், எல்லா அப்பாக்களையும் (அப்பாவாக இன்னும் மாறாதவர்களையும்) மாற்ற முடியாமல் போகலாம். ஆனால், ஓரிருவர் மாறினாலும் உலகம் கொஞ்சம் சுத்தமாகும், கொஞ்சம் ஒளியேறும், கொஞ்சம் சிறக்கும் என்ற பேராசை எனக்கு.  

கார்ப்பரேட் நிறுவனங்கள், சக மனிதர்களை சமமாக நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.  ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளன. சரியானபடி நடந்து கொள்ளாவிடில் வேலை போய்விடும் என்ற பயமும் ஒரு காரணம் என்றாலும், புரிதலும் முக்கிய காரணம். எனவே, வளையக்கூடிய ஐந்து வயது சிறுவர் சிறுமிகளுக்கும், தேடலோடு இருக்கும் பதின்ம வயதினருக்கும், மாறும் திறன் இன்னும் மரித்துப் போகாத மனிதர்களுக்கும், சக மனிதர்களை மரியாதையுடன், அன்புடன், மனித நேயத்துடன்,  நடத்த பாலினமோ, மொழியோ, நாடோ, தோலின் வண்ணமோ, இன்ன பிற வேறுபாடுகளோ தடையல்ல என்று சொல்லித் தரவேண்டியது, இந்த காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவை. இந்தக் கல்வி, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும், (மகனையோ மகளையோ பெற்ற) பெற்றோர்களுக்கும் தேவை; அப்பாக்கள் மாற அனைவரும் படிக்கவேண்டியிருக்கிறது.

நம்முடைய அடுத்த அறப்பணி இந்த நோக்கத்தை நோக்கி நகரும்!!! ஆற்றலும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தெரிவியுங்கள்.

பிற்குறிப்புகள் : 

  1. நண்பர்கள் என்பது பொதுவான சொல். பாலினம் சார்ந்ததல்ல.
  2. தன் எண்ணத்தை, செயலை, மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே, புதிதாகக் கற்றுக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே முதியவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!!!  அப்படி, வளைய முடியா வயதில் இருப்பவர்களை, தண்டிப்பது அல்லது தவிர்ப்பது மூலம் மாற்ற வேண்டியதுதான்.--- உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை!!

Wednesday, October 30, 2024

அக்கினிக்குஞ்சு

பாரதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும்... ஞான நிலையில், அக்கினியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதான் போலும்.... ஆனால் என் சிற்றறிவுக்கு இன்னும் எட்டவில்லை... ஆனால் அக்கினி குறித்து ஏதேதோ எண்ணங்கள்...  "அணைந்த தணல் / கங்கு" எனும் ஒரு சொல், சிறு பொறியாய்த் தொடங்கி, புராணங்களில் இறங்கி, வள்ளுவரைத் தொட்டு, அக்கா மஹாதேவியை நினைத்து, காரைக்காலம்மையிடம் தாவி, நாயன்மார்களில் ஓடி, பெண்களின் நிலையைக் கசந்து, சங்க இலக்கியத்தில் தீ தேடி என்று கொஞ்சம் தறிகெட்டுத்தான் ஓடுகிறது இந்த மனம்... 

அக்கினியில் எத்தனை விதம் - சுட்டெரிக்கும் கதிர்வீசும் சூரியனும், மோனநிலை தரும் பொன்னொளி வீசும் தீபச் சுடரும், அக்கினி தானே இவற்றில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லையா.... உள்ளுக்குள் மூண்டிருக்கும் தணலும், ஓங்கியெரியும் அனலும், உலகை விழுங்கும் அழலும் ஒன்றா... ஒன்றாகும் தகுதி பெற்றவைதான்.... சூழலைப் பொறுத்தும், வாய்ப்பைப் பொறுத்தும், உயரவும் ஒழியவும் செய்யுமோ... 

ஒருவேளை ஏற்றுக்கொள்பவரைப் பொறுத்தும் மாறுமோ... நெற்றிக் கண்ணிலிருந்து உமிழப்பட்ட பொறி, கார்த்திகைப் பெண்களிடம் முருகனாகவும், மன்மதனைச் சாம்பலாகவும் மாறியது / மாற்றியது.... உள்ளத்தனையது உயர்வு... நெருப்பின் திறம் மாற்றவும், உள்ளத்தின் திடம்தான் தேவை போலும். அறமற்ற செயல் செய்ய திடம் அவ்வளவு எளிதாக வருமா!! மன்மதன் எரிந்தொழிந்தது தன் செயல் அறமற்றது என்ற புரிதலால்தான்!! அதனால்தான் வினைத்திட்பம், வினை செயல்வகைக்கு முன்னாலும், வினைத்தூய்மை வினைத்திட்பதிற்கு முன்னாலும் வருகிறது போலும். வள்ளுவர், வள்ளுவர் தான்... வரிசைப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்!! 

தீயைப்பற்றி அவர் என்ன சொல்கிறார்!! தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் ஏன் சொன்னார். புண் ஆறும் - வடு என்றும் ஆறாது, தீராது. அப்படியானால் "நெருப்பில்லா சூட்டில் வெந்தேனம்மா, வடுவில்லா காயத்தில் நொந்தேனம்மா" என்று அக்கா மஹாதேவி பாடுகிறாரே.... அவர் என்ன சொல்ல வருகிறார் 🤔🤔

காரைக்காலம்மையோ நெருப்பைப் பார்த்தபோதெல்லாம் அதில் சிவத்தைப் பார்த்தவர் - அனலாடி, அழலாடி என்று ஐயனை வியந்து போற்றுபவர். காரைக்காலம்மையைப் போல, சிவ பக்தியால் மணவாழ்விலிருந்து விட்டு விடுதலையாகிய அரசி அக்கா மஹாதேவி. ஒரு அரசிக்கே இந்த நிலையென்றால் மற்றபெண்கள் நிலை என்ன!! இந்த இரண்டு சிவபக்தர்களும் அவர்களது பக்தி கண்டு பயந்த அல்லது கசந்த கணவர்களால் துறக்கப் பெற்றவர்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், பெரியபுராணத்தில், மாங்கனி பார்த்து பயந்த மடையனது பெயர் குறிக்கப்படுகிறது பரமதத்தன் என்று - காரைக்காலம்மையின் கணவனாக ( பரமதத்தன் என்றால் பரமனின் பரிசு என்று பொருள். -----க்குப் பெயர் பட்டு குஞ்சம்) . ஆனால் கணவனின் பக்திக்காக. தன் குழந்தையை, தாய்க்குத் தலைமகனை, கண்ணீர் வடிக்காமல் அரிந்து, பரிமாறிய பெண் பெயர் இல்லை - அவள் பெயர் திருவெண்காட்டு நங்கை என்று அவள் ஊர்ப் பெயரால்தான் சுட்டப்படுகிறது. பேரைத் தேடியிருக்க முடியாதா...சேனாதிபதியாக இருந்தவரின் மனைவி பெயர் கண்டுபிடிப்பது அத்தனை கடினமானதா!! அல்லது அவ்வளவு அலட்சியமா!! பக்தி செய்வதில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை என்று சொல்லப் புறப்பட்ட சேக்கிழாருக்கே, தாம் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் காட்டுகின்றோம் என்று புரியவில்லை என்றால் வேறு எந்த ஆணுக்குத்தான் புரிந்துவிடும் தான் காட்டும் அலட்சியங்கள் அல்லது பேதங்கள்.... 
  • இதில் யாரைச் சொல்ல.... இத்தகைய ஆண்களைப் பெற்று வளர்த்த அன்னையரையா!!! அறம் வளர்க்கும் தந்தையரையா!! சமூகத்தையா!!!
  • உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனும், உலகம் யாவையுந் தாமுள வாக்கியவனும் கூட இதில் விலக்கில்லை!! மகுடம் பறிக்கப்பட்ட போதுகூட சித்திரத்துச் செந்தாமரையாக இருந்தவன், சீதையிடம் மட்டும், தன் முத்துமாலை கருகும் வண்ணம் கோபப் பெருமூச்சு விட்டானாம்!! எல்லைநீத்த உலகை என் சொல்லால் சுடுவேன் என்றவள் வாளாவிருந்தாளாம்!! முத்துக்கள் நல்லவையானால் தீயில் கருகாது! அப்பேற்பட்ட முத்தே கருகியதென்றால், எத்தனை சூடான மூச்சு அது!! முத்து போலியா, உலகம் யாவையுந் தாமுளவாக்கியவன் போலியா, செந்தாமரை போலியா… தெரியவில்லை!! 
  • மானம் நீப்பின் உயிர் வாழா தசரதனும், போரில் இணையாக நின்ற கைகேயியிடம் அடுத்த மன்னன் குறித்த முடிவைக் குறித்துப் பேசவில்லை. பேசுவதை விடுங்கள், சொல்லக் கூட இல்லை. ஊரெல்லாம் அடித்த பறை கேட்ட சேடி வந்து சொல்லி, சாவகாசமாகத் தெரிந்து கொண்டாள்!! ஆஹா, இத்தனை "அதிகாரம்" ஒரு அரசிக்குப் போதாதா என்ன!! அறம் தவறினால் மானம் நிற்குமா என்ன? இசையும் நிற்கும், வசையும் நிற்கும் (இசை என்ற சொல்லுக்கு, புகழ் என்று பொருள் கொள்க) என்பது புறநானுறு. ஆனால், இந்தக் கதை இன்றும் கைகேயியின் வசையாகத்தான், தசரதனின் இசையாகத்தான் நிற்கிறது. அனைத்து வசைக்கும் காரணம் தசரதன் அல்லவா !! ஆனால் அந்தக் கவரிங் மானோ கவரிமானாகிவிட்டான்!! காலக்கொடுமை!! 
  • உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து!! அச்சாணிக்குப் பதிலாய், தன் கை கொடுத்தவள் கதியே இவ்வளவுதான்! பிறர் கதி என்ன!! உருவில் மட்டுமே ஒற்றை (அல்லது இரட்டை) வேற்றுமை... அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இத்தனையையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறானே, பரந்து கெடுக உலகியற்றியான்.... 
  • நவீன காலத்தில் கதையொன்றும் மாறிவிடவில்லை!! இன்றும், தன் மனைவி சம்பாதிக்கும் பொருள் வேண்டும், அவள் தரும் அறிவார்ந்த நுட்பங்கள், தன் வேலையைச் செப்பம் செய்வதற்கு வேண்டும்; ஆனால் குடும்பம் குறித்த முக்கிய முடிவெடுக்கும் போது, அவள் இருக்கவேண்டியதில்லை, அவளிடம் பேசவோ, சொல்லவோ வேண்டியதில்லை. சொன்னால், அவள் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! சொல்லாவிட்டால் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! நமக்கென்ன, யார் / எது எப்படிப் போனாலும், வசை அவளுக்குத்தானே! நாம், நம்பாட்டுக்கு, மீதி அறுபத்து நாலாயிரம் பேரில், யாரிடமாவது, எந்த சோசியல் மீடியவிலாவது, கதைத்துக் கொண்டிருக்கலாம்!!! ஆஹா... எந்த காலத்திலும் தசரதனாய் இருப்பது எத்தனை எளிது... 
  • எல்லா மதங்களும் பெண்களைத்தான் கல்லெறியச் சொல்லி சட்டம் இயற்றின... "அறம் மீறிய" ஒரு பெண்ணை, கருணையே வடிவான, நீதியை நிலை நிறுத்தும் வல்லமை கொண்ட கடவுளின் மகனும் கூட, தந்திரமாகத்தான் விடுவிக்க முடியும்! அவளுடன் பரத்தைமையில் சேர்ந்து நின்றவன் உங்களில் யாரடா என்று கேட்டுவிட முடியாது!! கடவுளே கேட்கவில்லையென்றால், சாதாரண மனிதர்கள் கேட்கத் துணிவார்களா என்ன... ஒற்றையாடையிலிருந்த பெண்ணைத் துகிலுரியும் போது கேட்கத் துணிவற்றுப் போனது பீஷ்மர் மட்டுமா? நாடே நெட்டை மரமாகத்தானே நின்றது!! அரசுடன் / அரசனுடன் சம்பந்தப்பட்டவனை, நமக்கு வேண்டிய சகாயம் செய்பவனை, அத்தனை சீக்கிரம் கேட்டுவிடுவார்களா!! நம்முள் நக்கீரர் யார்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் வேண்டும்!! அப்படி அறம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்கள்!! 
  • இந்த அழகில், உன்னுள் கடவுள் இருக்கிறார், தேடு என்றோ/ நீயே கடவுள் என்றோ சொன்னால் எந்தப் பெண்தான் அந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கி தபஸ்வினியாவாள்? இத்தகைய "conditioning"-ஐ உடைத்து நிமிர்ந்ததால்தான், மற்றவரைவிட, காரைக்காலம்மை உயர்வு!! அக்கா மஹாதேவி உயர்வு!! இது கூடப் புரியாமல் போயிற்றே சேக்கிழாருக்கு!! 
  • இதற்காக உலகை எரித்துப்போடவா முடியும்… மன்னன் பிழைக்கு, முலையைத்திருகி எறிந்து, மதுரையை எரித்த கண்ணகி போல்! மன்னன் மட்டுமல்ல எல்லோரும்தான் பிழைபட்டார்கள் என்ற வாதம் இங்கேயும் செல்லுபடி ஆகும்தானே… இன்னும் சொல்லப்போனால், எல்லோரும் அதிகப் பிழைபுரிய, ஓரிருவர் கணக்கு மட்டும் சற்றே குறைவாக இருப்பதால், உலகை எரித்துப் போடுவதில், ஒன்றும் தவறில்லைதான்!! அதுதான் அந்தப்பணியை சிரமேற்கொண்டு, உலக நாட்டு அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் பொறுப்பேற்று செவ்வனே செயலாற்றுகிறார்களோ!! 
அழிக்க மட்டும்தானா தீ... ஆக்கவும் திறனுள்ள தீயின் மேன்மை உலகம் முழுதும் உணரப்பட்டே இருந்தது; இருக்கிறது. பஞ்ச பூதங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், தமிழினம் தாண்டி பெரும்பாலான இனங்களிலும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. "ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அணியும், உடையோய்!" என்று உதியஞ்சேரல் என்ற மன்னனைப் புகழ்கின்றது புறநானூறு. தெறல் என்றால் வெம்மை, சினம், வருத்துதல், அழித்தல். "தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ" என்று பரம்பொருளை வந்திக்கிறது பரிபாடல். பூவின் நறுமணத்தையும், தீயின் வெம்மையையும் ஒன்றாகக் கருதுவது, இருநிலை ஒப்பு என்பதற்கு எப்பேர்ப்பட்ட எடுத்துக்காட்டு! 

நம் இலக்கியத்தில், தீ என்பது வலி / பயம் தருவதாக மட்டுமே காட்டப்படவில்லை. "அகலாது அணுகாது தீக்காய்வார் போல" என்ற குறள், தீயின் வெம்மையை சரியாகப் பயன்படுத்துவதைச் சுட்டுகிறது. தீக்காய வேண்டிய அளவிற்கு, தமிழகம் குளிர்ச்சியாக இருந்தது என்று நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கிறது!! தீ என்ற சொல் எத்தனை முறை திருக்குறளில் வருகிறது?? எங்கோ பதினெட்டு என்று படித்த நினைவு. பாயிரத்தில் தீ, நெருப்பு, எரி போன்ற சொற்கள் இல்லை. ஒளியோடு சேர்த்தால், அறத்திலும் பொருளிலும் இருபத்து சொச்சம் தேறிற்று. ஒளியை, தீயோடு ஒப்பாக எண்ணாவிட்டால் ஒரு பத்து குறையும். அப்படியானால், காமத்துப்பாலில் நான்கைந்து தீதானா… ஆச்சரியம்தான்… 

முன்பொரு காலத்தில் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். இப்போது யோசித்துப் பார்த்தால். தேவை எது ஆசை எது என்று பிரிப்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல இன்று மட்டுமல்ல, சங்கப்புலவர்களுக்கும் சிரமம் தான் போலும். பசியும் தீ தான், ஆசையும் தீதான்!! பசி என்பது அடிப்படைத் தேவை! ஆசை என்பது அடிப்படைத் தேவை இல்லை. அப்படியென்றால் இரண்டுக்கும் தீ என்ற சொல் ஏன்? இரண்டுமே எரித்துவிடும் தன்மையால் ஒன்று தான். கவனமாக இல்லையென்றால் தகுதியற்ற ஒன்றிற்காக ஆசையினாலும் அல்லது பசியால் பத்தும் பறந்து போனாலும் எரிக்கவோ, எரிந்துபோகவோ தலைப்படலாம்! 

தணலென்ற ஒரு சொல் மூட்டிய தீ இந்த இந்த மன ஓட்டம்.... மனதின் வேகம் காற்றின் வேகத்தை, ஒலியின் வேகத்தை விட அதிகம். அவற்றின் பரவலை விட, ஒழுங்கற்றது. ஒலி பரவ ஊடகம் தேவை; காற்று பரவ வேறு ஊடகம் தேவையில்லை; வெற்றிடமாக இருந்தால் இன்னும் வேகமாகப் பரவும். மனம் வெற்றிடமானால், எண்ணவோட்டம் நிற்கும், துறவு வசப்படும் என்றுதான் கூறுகிறார்கள். என்றோ ஒருநாள் எழுதிவைத்த இந்தக் கட்டுரையைப் பார்க்கும்போது, என்றாவது ஒருநாள் வெற்றிடமாவோம் என்ற எண்ணம் நகைப்பைத் தருகிறது. இருந்தாலும் யானை பிழைத்த வேல் உயர்வல்லவா... வெற்றிடமாக முயற்சிதான் செய்வோமே!!

Saturday, June 22, 2024

அமையாது உலகு

கேள்விகளே நம்மை வழிநடத்துகின்றன!!! எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கொஞ்சம் மங்கித்தான் போய்விடும் போலும். கொஞ்சம் குறைவதென்ன... கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல்  போய்விடும்... 

கேள்விகளே இல்லாமல்கூட உலகம் இருக்க முடியுமா என்பதே ஒரு கேள்விதான்

விடை தெரியாத வினாக்கள் கொடுக்கும் தேடல், விடை தெரிந்தவுடன் கிடைக்கும் நிறைவை  விட, கோடி பெறும். நிறைவு தேவைதான் ஆனால் தேடலே ருசிக்கிறது. ஒரு வேளை, மனம் முழுதும் ஓய்ந்து ஒரு மோன நிலை வரும் போது நிறைவு மட்டும் போதுமாய் இருக்கலாம். 

ஏன் இப்படி என்றோ, ஏன் இப்படி இருக்கக் கூடாதென்றோ கேட்டு அறிவு  வளர்ப்பது மட்டுமல்லாமல், எது சரி என்று கேட்டு அறம் காப்பதுவும் கேள்விதானே. விஞ்ஞானம் மட்டுமின்றி   மெய்ஞானமும் கேள்வியின் மேலே எழுந்ததாகத்தானே இருக்க வேண்டும்!!

நீரின்றி அமையாது உலகு என்பது பாதி சரி... கேள்வியின்றியும் அமையாது உலகு....   

கேள்விப் பெருங்கணைகளே பெருந்துணைகளாக நகர்ந்து செல்கிறது வாழ்க்கை நதி...

Friday, January 12, 2024

அம்புப் படுக்கை

நமது இதிகாசங்கள் சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை.... ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு பாடங்களின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது.  

நேற்றிரவிலிருந்து பீஷ்மரை நினைப்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை... 

 அம்புப் படுக்கை என்றால் என்ன, பீஷ்மரைப் போன்ற மாவீரன், புலன்களைவென்ற பெருவீரன்,  தன் வயதொத்த பெண்ணை தந்தை மணப்பதற்காகத் தன் இளமையின் தேவைகளைத் துறந்த அன்பாளன் (அவர் அந்தப் பெண்ணை முதலில் பார்த்திருந்தால் கதையே வேறு என்பது வேறு கதை ), தன்  தேசத்திற்கு  ஆற்றவேண்டிய  பணிகளுக்காக அவமானங்களைக் சகித்துக்கொண்ட தலைவன், குழந்தை பெற்றுக் கொள்ளாவிடிலும் தனது தம்பிகள் அவன் மகன்கள், பேரன்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்குத் தந்தையாக இருந்தவன் எப்படி அம்புப் படுக்கையில் விழமுடியும்? அப்படியானால் அம்புப் படுக்கை  எதன் உருவகம்? என்ன சொல்ல நினைக்கிறார் வியாசர் என்ற கேள்விகள் அலைபோல எழுவதும் விழுவதுமாக இருந்தன ஓயத்தான் இல்லை, பதிலும் இந்தக் கட்டுரையும் மனதில் வரும் வரை!! 

அறம் அறிந்தவன் அறம் பிழைக்கும் போது அவனது மனமே அவனைச் சுட்டெரிக்கும் அல்லது அம்பாய்க் குத்தும்.  அப்படி வாழ்நாள் முழுவதும் ஒருவர்  இழைத்த தவறுகள், பிழைத்த அறங்கள் அனைத்தும் வரிசை கட்டி நிற்குமானால் அது அம்புகளின் அணிவகுப்புப் போலத்தான் இருக்குமாயிருக்கும். 

  • சகோதரர்களுக்குத் துரோகம் இழைத்த துரியோதனன் பக்கம் நின்ற பிழை ஒரு அம்பு;  
  • திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்க வாய்ப்புகள் இருந்தும், (அரசு பதவியின் வசதிகளை நினைத்து அல்லது பாசத்தின் காரணமாக)   தட்டிக்கேட்காமல்,  வாழாவிருந்தது ஒரு அம்பு;  
  • தவறென்று தெரிந்தும், முட்டாள்தனம் என்று தெரிந்தும், தம்பிகளுக்காக, அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற பெண்களின் விருப்பத்திற்குப் புறம்பாக, தம்பிகளுடன் சேர்த்துவைக்க முயற்சித்தது ஒரு அம்பு   
  • துரியோதனாதிகளும் பாண்டவர்களும் ஒரேவிதமான உறவென்றாலும், துரியோதனனுக்காக யுத்தம் புரிந்தது ஒரு அம்பு; வில்லை வெட்டி எறிந்து விட்டு வெளியேறிய விதுரனைப் போல் அல்லாமல், அறமற்ற துரியோதனனுடன் நின்றது ஒரு அம்பு... 

என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த அம்புகளின் வீரியம் அப்பேர்ப்பட்ட வீரனை, அறவாளனை வென்றது; மரணப்படுக்கையில் குத்திக் கிழித்தது. 

உண்மையில் மரணம் வரை காத்திருப்பதில்லை இந்த அம்புகள்; அன்றாடம் நம்மைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அன்றாடம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது நமது அம்புகளை கவனித்து,  உருவிப் போட வேண்டும் என்ற காரணத்திற்காக, ஒவ்வொரு வருடமும், பொங்கலுக்குப் பின்னால், சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பித்த பின் வரும் வளர்பிறை அஷ்டமியில் பீஷ்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்வோரும் உண்டு. நம்முள் இருக்கும் பீஷ்மரைச் சுத்தம் செய்தலே தர்ப்பணம் செய்தலை விட தலையாய கடன்... 

எத்தனை விதமாக, அறம் பிழைத்தலின் விளைவுகளை  சொல்லித் தருகிறது என் தேசம்!!! என்ன பேறு பெற்றேன் இத்தகைய தேசத்தில் பிறக்க.... இன்னொரு பிறப்பில்லாதிருக்க வேண்டும்!! அப்படியிருந்தால், இந்த தேசத்திலேயே, தமிழ் பேசும், தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் மனிதப் பிறப்பாகவே பிறக்க வேண்டும்!!! 

எந்தப் பிறப்பிலும், இந்தப் பிறப்பின் எஞ்சிய நாளிலும், எந்த நிலையிலும் மனதால், சொல்லால், செயலால் அறம் பிழைக்காமல் வாழ வேண்டும்... இது ஒன்றே பிரார்த்தனை... 

Saturday, February 19, 2022

எழுதாமல் போவேனோ -தவிப்பு 2

வாசனைகள் மூளையின் மேற்பரப்புகளை விட்டு, மூக்குக்கு மேலே, கண்களுக்குப்பின்னாலுள்ள ஆல்ஃபாக்டரி பல்ப் என்ற உணர்வு மையத்துக்குச் சென்று விரிவான நினைவலைகளை எழுப்புவதோடு நம்முள் அமிழ்ந்துபோன எண்ணங்களையும் தூண்டுவதாக இன்றைய அறிவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன. நேற்று வாசித்த ஜெயமோகனது கட்டுரை  என் கண்களுக்கு வாசம் உணரும் திறன் கொடுத்த பூ!!

"இலக்கியம் அறிந்தவனின் வாழ்க்கை ஒரு கவிதைபோல. அது ரத்தினச்சுருக்கமாக இருக்கலாம். எளிமையானதாக இருக்கலாம். அவனுடைய அன்றாட நாட்கள் மிகச்சாதாரணமாகக் கடந்துசெல்லலாம். ஆனாலும் அவன் வாழ்க்கை எல்லையற்றது. அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் முடிவிலாத பொருள் உண்டு. அவன் வாழ்க்கை விதைகளின் குவியல். அது உறங்கும் பெருங்காடு. ஒரு பூவின் இதழிலிருந்து மானுடத்தின் அனைத்து வசந்தங்களையும் உணர்ந்துவிட முடியுமா? வசந்தங்களை உருவாக்கி உருவாக்கி விளையாடும் பிரபஞ்ச லீலை வரை சென்றுவிட முடியுமா? " என்ற கேள்விப் பெருங்கணைகளோடு இல்லை இல்லை பொங்கிப் பிரவாகிக்கும் கங்கையாக, தூங்கிக் கிடந்த என் விதைகளை உயிர்ப்பிக்க  முயன்றார் 

2016ல்"எழுதாமல் போவேனோ"  என்ற கட்டுரையை எழுதும்போது நான் அறிந்திருக்கவில்லை எனது எழுத்துலக வனவாசம்  எவ்வளவு வலுவானது என்று!! வனவாசம் வாழ்வின் தடத்தை மாற்றிபோடும் வல்லமை கொண்டதென்று!! வாழ்வின் சிலதளங்களிலான (இனிய) பயணங்கள் , வேறு சில தளங்களில் பயணிக்கவிடாமல்  வனவாசமாக மாற்றிவிடக்கூடும் என்று!!  ஜெயமோகன் சொல்லாதவரை உணர்ந்திருக்கவில்லை இந்த வனவாசம் என் வானவில்லின் வர்ணங்களை உறிஞ்சியிருந்தது என்று!!! வழித்தடங்களும் வனவாசங்களும் மாறி மாறி பல்வேறு திசைகளுக்கு இழுத்துச் செல்கின்றன என்று!! 

கம்பனும், வள்ளுவனும், பாரதியும் இன்னபிற தேவதைகளும் (தேவதைகளுக்கு ஆண்பால் என்ன, இம்மூவரையும் இந்த சொல்லுக்குள் எப்படி அடைக்க, எப்படி ஒதுக்க?) என்னுள் தூவிச்சென்ற பல்லாயிரம்  விதைக்குவியலோடு உறங்கியே தொலைந்த பெருங்காடுகளும், உறங்காமல் உறைந்த ரயில்களின் அட்டவணைகளுமாக நகர்கிறது வாழ்க்கை.... 

விதைத்தது இம்மூவர் மட்டும்தானா...என்னைக் கடக்கும்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதரும்  விதைக்கவில்லையா... தொலைந்தது எது? தொலைத்தது யார்? இரண்டும் ஒன்றல்லவோ... காரணமும் கருப்பொருளும் நானல்லவோ... 

எழுத்து என்னை வாழ்வித்தகாலம் போய், பிச்சியாய் எழுத்து என்னுள் தவித்தலைந்து,  கர்ப்பகாலம் தாண்டிய சேய் போல வேறெதுவும்  செய்யவொட்டாமல், வலியோடும் நிறைவோடும் பிறப்பெடுத்த காலமும் போய், பேசப்பிடிக்காமல், பேசத்தோன்றாமல், ஓர் ஆழ்ந்த கடலுக்குள் நீண்ட அடர் குகைக்குள் உட்கார்ந்துகொண்டு என் எழுத்து தவம்செய்கிறதோ... இல்லை மாய்ந்தேதான் போனதோ...

நான் மூச்சுத்திணறி நின்ற போதும் கூட என்னுடன் பயணித்த இலக்கிய நதி தேங்கிநிற்கிறது... என் பேனா பேச்சுத்திணறி ஐந்தரை  ஆண்டுகளாகிறது. எப்படி மீட்டெடுப்பேன் என்னுள் தொலைந்த / என்னைத் தொலைத்த  கம்பனை, வள்ளுவனை, பாரதியை... 

பார்ப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று... தேங்கி நிற்பது காடு வளர்க்கக் காத்திருக்கும் அணையா, காத்துக்கிடந்து காயவிருக்கும் துளியா என்று... விதைகள் தூங்கியோ எரிந்தோ தொலையுமா, ஜெயமோகன் ஜெயிக்கிறாரா  என்று... 

காடு வளர்ப்பதும் நதியைக் காப்பதும் யார்? காலம் எப்படி பொறுப்பாகும்!!

Saturday, May 9, 2020

மரணத்தின் விளிம்பிலிருந்து....

மரணம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இன்னும் இருக்கிறது!!   வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்து. மனிதர்களை நேரில் பார்த்து ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது!!  இந்நேரத்தில் வாழ்வை உற்றுநோக்கும் வயதும்அனுபவமும், மனதும், சிந்தனையாளர்கள் தொடர்பும் வாய்க்கப்பெற்றது முன்வினைப்பயன்! வேறெந்த தலைமுறைக்கும் வாய்க்காத கொடுப்பினை! வாழ்வியல் தத்துவங்கள் புடம்போடப்படுகின்றன! சில உடைந்துவிட்டதாக தோன்றுகின்றது; வேறு சில தினமும் வெவ்வேறு கோணங்களைக் காட்டுகின்றன! இயற்கை நடத்தும் மிகப்பெரிய பாடமாக சில நேரம், பாரம் குறைக்க இயற்கைசெய்யும் முயற்சியாகச் சிலநேரம் என்று இந்தகாலகட்டம் மிகப்பெரிய ஆச்சரியத்தையளிக்கிறது. விளைவு, மீண்டும் ஓர் எண்ணக்கோர்வை!!


  • அன்பைத்தவிர பெரிய தவமில்லை. அன்பென்பது ஒரு வெளிப்பாடாய், உணர்வாய்த்தோன்றிய காலம்போக, அன்பு ஒரு தன்னிலையிருப்பாய் தோன்றுகிறதுஓரிருவர்மேல் மட்டும் காட்டப்படும் அக்கறை தாண்டி, அனைத்து உயிர்கள்மீதும் பொழியும் அனபைத்தவிர தவமொன்றுமில்லைநதியாய், நதியில் பயணிக்கும் இலையாய் இருப்பதன்  பொருள் இதுவாகத்தான் இருக்கக்கூடும்... நதிக்கு இன்னார்மேலென்று தனிப்பட்ட பிடிப்பில்லை... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சலசலத்து ஓடும் அதன் ஓட்டம் நிற்பதில்லை... அழகு குறைவதில்லை... யாரும் நீர்சேந்தவில்லையென்றோதேவைக்கு  அதிகமாகக் கொண்டு செல்கிறார்கள் என்றோ எந்த சலனமும் இல்லை... நீர்சேந்துவோரின் தகுதியோ மனநிலையோ  ஒருபொருட்டுமில்லை...
  • நன்றி என்பது மிகவும் முக்கியமான உணர்வு! கடினமான ஒரு நாளைக்கூட  அழகியதாய் மாற்றும் வல்லமை கொண்டது. வாழ்வு மிச்சமிருப்பதே நன்றிபாராட்டப் போதுமானதாக இருக்கிறது!! அதற்குமேல் கிடைக்கும் அத்தனையும் பெருங்கொடையாகத் தெரிகின்றது!!!  மரணம் முந்திக்கொள்வதற்குள், நம் வாழ்வைச் செம்மையாக்கிய  அத்தனைபேருக்கும் நன்றி சொல்லித்தீர்த்துவிட முடியுமா!?!?!
  • தடிகொண்டு அடித்து பழுத்தது ருசிக்காது, தானாகப்  பழுத்தது ருசிக்கும்! உண்மையாகவா!?!?!  வாழ்வின் ஓட்டம் என்ற பெருந்தடியால் அடிபடாமல் பழுக்கவும் முடியுமோ!!  
  • இனையர் இவரெமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்பது வள்ளுவம். இவர் எமக்கு இத்தனை அன்புடையவர், நாமும் இவர்க்கு அப்படியே என்று புகழ்ந்துரைத்தால் நட்பு சிறப்பிழக்கும் என்பது பொருள்! நட்பின் தரம் சொல்லாமல் அன்பின் ஆழம்  காட்டாமல் நன்றியுரைப்பது எப்படி?
  • நட்பு, கொடை, தயை இம்மூன்றும் குடிப்பிறப்பு என்பது ஒளவை வாக்கு. என்னைச் சுற்றியிருப்போர் அத்தனை பேரும் தன்னலம் பாராட்டா நட்புடனும், வாரி வழங்கும் கொடையாளராகவும், பேரன்பு கொண்ட கருணையாளராகவும் இருப்பது எப்படி? சூழல் காரணமா? குடிப்பிறப்பா? இவர்களெல்லாம் வெவ்வேறு மாநிலத்தில் பிறந்து, வெவ்வேறு மொழிபேசி, வெவ்வேறு குடிப்பிறந்தோர்!!
  • மரணம் எப்போதும் இதே தூரத்தில்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் எட்டிப்பிடித்துவிடக்கூடியதாக! ஏதோ இப்போதுதான் அருகில் வந்ததுபோல் ஏன் இப்படி ஒரு பதற்றம்!!! என்ன, ஒரு வித்தியாசம் சொல்லலாம்! 2020க்கு முற்பட்டகாலத்தில் மரித்தோரின் உடலு றுப்புகளை தானம் கொடுத்திருக்கலாம் இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது!
  • வாழ்க்கை எப்போதுவேண்டுமானாலும் முடிந்துவிடக்கூடுமென்ற நினைவு, அறிவு எப்போதும் வேண்டும் என்ற நினைத்த தேசத்திலும்கூட வாழ்க்கை வினோதமாகத்தான் இருக்கிறது!!! மனிதர்களின் இயக்கத்தை மரணபயம் புரட்டிப்போட்ட கடந்த சிலவாரங்கள் வினோதமானவை!! மனிதர்களின் ஆழ்மனம் தன்னை எத்தனை விதமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளது... அதிநுட்பமான அழகியலும், அடியாழத்தைத்தொட்ட அவலங்களுமாக!!!  
  • தெரிந்தோர் தெரியாதோர் என்ற பாகுபாடின்றி உணவுக்கு வழிசெய்ய களம்புகுந்தோரும், இருக்கிறது இல்லை என்ற பாகுபாடின்றி பொருட்களை வாங்கிக் குவித்தோருமாக உலகம் எத்தனை விதமான வேறுபாடுகளைக்கொண்டது!!
  • எதுவும் உறுதியில்லை என்று புரிந்தபின்னும் இயல்பாய், உற்சாகமாய், அழகாய் வாழ்வோரும், இத்தனைக்குப்பிறகும், சிறுவிஷயங்களுக்கும் அலட்டி, தன்னையும் பிறரையும் வருத்துவோரும் வாழும் முரண்....
  • வலிமிகுந்த / குழப்பமான நிலையிலும் ஆதாரமற்ற  கருத்துகளை ஆராயாமல் அப்படியே பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள்  படித்தவர்களாக, பொறுப்பு மிக்க பதவியிலிருப்பவர்களாக இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்! நிறைகுடம் தளும்பாது!! குறைகுடம் கூத்தாடும்!! படிப்பும் பதவியும் பொறுப்பும் நிறைகுடமாக்காது போலும்!!!!
  • பொங்கிவழியும் கோப்பைகள் எதையும் உட்கொள்ளும் தன்மையற்றவை, உங்களைக் காலி கோப்பையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றொரு அறிவுரை உண்டு! பொங்கிவழிந்த கோப்பைகளும் (குறைகுடங்களும்) அமைதியாய் தம்மை நிரப்பிக்கொண்ட காலிகோப்பைகளும் (நிறைகுடங்களும்) நிரம்பிய அழகிய முரண் இவ்வுலகம்!
  • 2019 ஆகஸ்டில் இந்திய துணைக்கண்டத்திலுள்ள பெருவாரி நதிகள் பொங்கி அருகிலுள்ள சிவாலயங்களுக்குள் புகுந்ததை ஊடகங்கள் தெரிவித்தன! 2020ல் மனித சஞ்சாரம் முழுவதும் / பெரும்பாலும் அடங்கிவிட்டது! அசுரராய் மாறிவிட்ட நரர்களிடமிருந்து தம்மைக் காக்க நதிகள் நடத்திய வழிபாடு வெற்றிபெற்றதோ!!  ஒருவேளை, இந்த வைரஸ் நோயில்லையோ!!  உலகைக் காக்கவந்த மருந்தோ!!
  • பொருளாதாரத்துக்காக குடிமக்கள் நலனை அடகுவைக்காத எங்கள் தேசம் என்று நம்முள்  சிலர் வலைத்தளங்களில் மார்தட்டிய  சிலநாட்களில் கள்ளுக்கடையைத் திறந்த அரசாங்கமும், காய்கறிக்கடையை விட கள்ளுக்கடையில் கூடிய கூட்டத்தால் வரவிருக்கும் காய்ச்சலும், கர்வமில்லாமல் அலட்டாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்திய அவலம்யார்கண்டது, இதுகூட இயற்கையின் elimination process-ன் prioritization technique-ஆக இருக்கலாம்!
  • இன்னும் 30 மணியோ, 30 நாளோ, 30 வருடமோ, நாம்மட்டுமே இட்டு நிரப்பக்கூடிய விஷயங்கள் எவை என்று தெரிந்தால் எவ்வளவு எளிதாயிருக்கும்!! உண்மையில் அப்படி ஒன்றும் இல்லையோ... பேரறிஞர்களுக்கு மட்டும் அப்படி ஒரு குறிக்கோள் இருக்கிறதன்றோ! அல்லது  அப்படி ஒரு குறிக்கோள் இருப்பவர்கள் மட்டும்  பேரறிஞர்கள் ஆகிறார்களோ!! பேரறிஞராகவெல்லாம் ஒன்றும் ஆகவேண்டாம்! வேலையைப் பாதியில் விட்டுச்செல்வதாக குற்ற உணர்வின்றி விடைபெற்றால் போதும்!