Wednesday, October 30, 2024

அக்கினிக்குஞ்சு

பாரதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும்... ஞான நிலையில், அக்கினியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதான் போலும்.... ஆனால் என் சிற்றறிவுக்கு இன்னும் எட்டவில்லை... ஆனால் அக்கினி குறித்து ஏதேதோ எண்ணங்கள்...  "அணைந்த தணல் / கங்கு" எனும் ஒரு சொல், சிறு பொறியாய்த் தொடங்கி, புராணங்களில் இறங்கி, வள்ளுவரைத் தொட்டு, அக்கா மஹாதேவியை நினைத்து, காரைக்காலம்மையிடம் தாவி, நாயன்மார்களில் ஓடி, பெண்களின் நிலையைக் கசந்து, சங்க இலக்கியத்தில் தீ தேடி என்று கொஞ்சம் தறிகெட்டுத்தான் ஓடுகிறது இந்த மனம்... 

அக்கினியில் எத்தனை விதம் - சுட்டெரிக்கும் கதிர்வீசும் சூரியனும், மோனநிலை தரும் பொன்னொளி வீசும் தீபச் சுடரும், அக்கினி தானே இவற்றில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லையா.... உள்ளுக்குள் மூண்டிருக்கும் தணலும், ஓங்கியெரியும் அனலும், உலகை விழுங்கும் அழலும் ஒன்றா... ஒன்றாகும் தகுதி பெற்றவைதான்.... சூழலைப் பொறுத்தும், வாய்ப்பைப் பொறுத்தும், உயரவும் ஒழியவும் செய்யுமோ... 

ஒருவேளை ஏற்றுக்கொள்பவரைப் பொறுத்தும் மாறுமோ... நெற்றிக் கண்ணிலிருந்து உமிழப்பட்ட பொறி, கார்த்திகைப் பெண்களிடம் முருகனாகவும், மன்மதனைச் சாம்பலாகவும் மாறியது / மாற்றியது.... உள்ளத்தனையது உயர்வு... நெருப்பின் திறம் மாற்றவும், உள்ளத்தின் திடம்தான் தேவை போலும். அறமற்ற செயல் செய்ய திடம் அவ்வளவு எளிதாக வருமா!! மன்மதன் எரிந்தொழிந்தது தன் செயல் அறமற்றது என்ற புரிதலால்தான்!! அதனால்தான் வினைத்திட்பம், வினை செயல்வகைக்கு முன்னாலும், வினைத்தூய்மை வினைத்திட்பதிற்கு முன்னாலும் வருகிறது போலும். வள்ளுவர், வள்ளுவர் தான்... வரிசைப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்!! 

தீயைப்பற்றி அவர் என்ன சொல்கிறார்!! தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் ஏன் சொன்னார். புண் ஆறும் - வடு என்றும் ஆறாது, தீராது. அப்படியானால் "நெருப்பில்லா சூட்டில் வெந்தேனம்மா, வடுவில்லா காயத்தில் நொந்தேனம்மா" என்று அக்கா மஹாதேவி பாடுகிறாரே.... அவர் என்ன சொல்ல வருகிறார் 🤔🤔

காரைக்காலம்மையோ நெருப்பைப் பார்த்தபோதெல்லாம் அதில் சிவத்தைப் பார்த்தவர் - அனலாடி, அழலாடி என்று ஐயனை வியந்து போற்றுபவர். காரைக்காலம்மையைப் போல, சிவ பக்தியால் மணவாழ்விலிருந்து விட்டு விடுதலையாகிய அரசி அக்கா மஹாதேவி. ஒரு அரசிக்கே இந்த நிலையென்றால் மற்றபெண்கள் நிலை என்ன!! இந்த இரண்டு சிவபக்தர்களும் அவர்களது பக்தி கண்டு பயந்த அல்லது கசந்த கணவர்களால் துறக்கப் பெற்றவர்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், பெரியபுராணத்தில், மாங்கனி பார்த்து பயந்த மடையனது பெயர் குறிக்கப்படுகிறது பரமதத்தன் என்று - காரைக்காலம்மையின் கணவனாக ( பரமதத்தன் என்றால் பரமனின் பரிசு என்று பொருள். -----க்குப் பெயர் பட்டு குஞ்சம்) . ஆனால் கணவனின் பக்திக்காக. தன் குழந்தையை, தாய்க்குத் தலைமகனை, கண்ணீர் வடிக்காமல் அரிந்து, பரிமாறிய பெண் பெயர் இல்லை - அவள் பெயர் திருவெண்காட்டு நங்கை என்று அவள் ஊர்ப் பெயரால்தான் சுட்டப்படுகிறது. பேரைத் தேடியிருக்க முடியாதா...சேனாதிபதியாக இருந்தவரின் மனைவி பெயர் கண்டுபிடிப்பது அத்தனை கடினமானதா!! அல்லது அவ்வளவு அலட்சியமா!! பக்தி செய்வதில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை என்று சொல்லப் புறப்பட்ட சேக்கிழாருக்கே, தாம் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் காட்டுகின்றோம் என்று புரியவில்லை என்றால் வேறு எந்த ஆணுக்குத்தான் புரிந்துவிடும் தான் காட்டும் அலட்சியங்கள் அல்லது பேதங்கள்.... 
  • இதில் யாரைச் சொல்ல.... இத்தகைய ஆண்களைப் பெற்று வளர்த்த அன்னையரையா!!! அறம் வளர்க்கும் தந்தையரையா!! சமூகத்தையா!!!
  • உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனும், உலகம் யாவையுந் தாமுள வாக்கியவனும் கூட இதில் விலக்கில்லை!! மகுடம் பறிக்கப்பட்ட போதுகூட சித்திரத்துச் செந்தாமரையாக இருந்தவன், சீதையிடம் மட்டும், தன் முத்துமாலை கருகும் வண்ணம் கோபப் பெருமூச்சு விட்டானாம்!! எல்லைநீத்த உலகை என் சொல்லால் சுடுவேன் என்றவள் வாளாவிருந்தாளாம்!! முத்துக்கள் நல்லவையானால் தீயில் கருகாது! அப்பேற்பட்ட முத்தே கருகியதென்றால், எத்தனை சூடான மூச்சு அது!! முத்து போலியா, உலகம் யாவையுந் தாமுளவாக்கியவன் போலியா, செந்தாமரை போலியா… தெரியவில்லை!! 
  • மானம் நீப்பின் உயிர் வாழா தசரதனும், போரில் இணையாக நின்ற கைகேயியிடம் அடுத்த மன்னன் குறித்த முடிவைக் குறித்துப் பேசவில்லை. பேசுவதை விடுங்கள், சொல்லக் கூட இல்லை. ஊரெல்லாம் அடித்த பறை கேட்ட சேடி வந்து சொல்லி, சாவகாசமாகத் தெரிந்து கொண்டாள்!! ஆஹா, இத்தனை "அதிகாரம்" ஒரு அரசிக்குப் போதாதா என்ன!! அறம் தவறினால் மானம் நிற்குமா என்ன? இசையும் நிற்கும், வசையும் நிற்கும் (இசை என்ற சொல்லுக்கு, புகழ் என்று பொருள் கொள்க) என்பது புறநானுறு. ஆனால், இந்தக் கதை இன்றும் கைகேயியின் வசையாகத்தான், தசரதனின் இசையாகத்தான் நிற்கிறது. அனைத்து வசைக்கும் காரணம் தசரதன் அல்லவா !! ஆனால் அந்தக் கவரிங் மானோ கவரிமானாகிவிட்டான்!! காலக்கொடுமை!! 
  • உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து!! அச்சாணிக்குப் பதிலாய், தன் கை கொடுத்தவள் கதியே இவ்வளவுதான்! பிறர் கதி என்ன!! உருவில் மட்டுமே ஒற்றை (அல்லது இரட்டை) வேற்றுமை... அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இத்தனையையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறானே, பரந்து கெடுக உலகியற்றியான்.... 
  • நவீன காலத்தில் கதையொன்றும் மாறிவிடவில்லை!! இன்றும், தன் மனைவி சம்பாதிக்கும் பொருள் வேண்டும், அவள் தரும் அறிவார்ந்த நுட்பங்கள், தன் வேலையைச் செப்பம் செய்வதற்கு வேண்டும்; ஆனால் குடும்பம் குறித்த முக்கிய முடிவெடுக்கும் போது, அவள் இருக்கவேண்டியதில்லை, அவளிடம் பேசவோ, சொல்லவோ வேண்டியதில்லை. சொன்னால், அவள் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! சொல்லாவிட்டால் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! நமக்கென்ன, யார் / எது எப்படிப் போனாலும், வசை அவளுக்குத்தானே! நாம், நம்பாட்டுக்கு, மீதி அறுபத்து நாலாயிரம் பேரில், யாரிடமாவது, எந்த சோசியல் மீடியவிலாவது, கதைத்துக் கொண்டிருக்கலாம்!!! ஆஹா... எந்த காலத்திலும் தசரதனாய் இருப்பது எத்தனை எளிது... 
  • எல்லா மதங்களும் பெண்களைத்தான் கல்லெறியச் சொல்லி சட்டம் இயற்றின... "அறம் மீறிய" ஒரு பெண்ணை, கருணையே வடிவான, நீதியை நிலை நிறுத்தும் வல்லமை கொண்ட கடவுளின் மகனும் கூட, தந்திரமாகத்தான் விடுவிக்க முடியும்! அவளுடன் பரத்தைமையில் சேர்ந்து நின்றவன் உங்களில் யாரடா என்று கேட்டுவிட முடியாது!! கடவுளே கேட்கவில்லையென்றால், சாதாரண மனிதர்கள் கேட்கத் துணிவார்களா என்ன... ஒற்றையாடையிலிருந்த பெண்ணைத் துகிலுரியும் போது கேட்கத் துணிவற்றுப் போனது பீஷ்மர் மட்டுமா? நாடே நெட்டை மரமாகத்தானே நின்றது!! அரசுடன் / அரசனுடன் சம்பந்தப்பட்டவனை, நமக்கு வேண்டிய சகாயம் செய்பவனை, அத்தனை சீக்கிரம் கேட்டுவிடுவார்களா!! நம்முள் நக்கீரர் யார்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் வேண்டும்!! அப்படி அறம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்கள்!! 
  • இந்த அழகில், உன்னுள் கடவுள் இருக்கிறார், தேடு என்றோ/ நீயே கடவுள் என்றோ சொன்னால் எந்தப் பெண்தான் அந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கி தபஸ்வினியாவாள்? இத்தகைய "conditioning"-ஐ உடைத்து நிமிர்ந்ததால்தான், மற்றவரைவிட, காரைக்காலம்மை உயர்வு!! அக்கா மஹாதேவி உயர்வு!! இது கூடப் புரியாமல் போயிற்றே சேக்கிழாருக்கு!! 
  • இதற்காக உலகை எரித்துப்போடவா முடியும்… மன்னன் பிழைக்கு, முலையைத்திருகி எறிந்து, மதுரையை எரித்த கண்ணகி போல்! மன்னன் மட்டுமல்ல எல்லோரும்தான் பிழைபட்டார்கள் என்ற வாதம் இங்கேயும் செல்லுபடி ஆகும்தானே… இன்னும் சொல்லப்போனால், எல்லோரும் அதிகப் பிழைபுரிய, ஓரிருவர் கணக்கு மட்டும் சற்றே குறைவாக இருப்பதால், உலகை எரித்துப் போடுவதில், ஒன்றும் தவறில்லைதான்!! அதுதான் அந்தப்பணியை சிரமேற்கொண்டு, உலக நாட்டு அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் பொறுப்பேற்று செவ்வனே செயலாற்றுகிறார்களோ!! 
அழிக்க மட்டும்தானா தீ... ஆக்கவும் திறனுள்ள தீயின் மேன்மை உலகம் முழுதும் உணரப்பட்டே இருந்தது; இருக்கிறது. பஞ்ச பூதங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், தமிழினம் தாண்டி பெரும்பாலான இனங்களிலும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. "ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அணியும், உடையோய்!" என்று உதியஞ்சேரல் என்ற மன்னனைப் புகழ்கின்றது புறநானூறு. தெறல் என்றால் வெம்மை, சினம், வருத்துதல், அழித்தல். "தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ" என்று பரம்பொருளை வந்திக்கிறது பரிபாடல். பூவின் நறுமணத்தையும், தீயின் வெம்மையையும் ஒன்றாகக் கருதுவது, இருநிலை ஒப்பு என்பதற்கு எப்பேர்ப்பட்ட எடுத்துக்காட்டு! 

நம் இலக்கியத்தில், தீ என்பது வலி / பயம் தருவதாக மட்டுமே காட்டப்படவில்லை. "அகலாது அணுகாது தீக்காய்வார் போல" என்ற குறள், தீயின் வெம்மையை சரியாகப் பயன்படுத்துவதைச் சுட்டுகிறது. தீக்காய வேண்டிய அளவிற்கு, தமிழகம் குளிர்ச்சியாக இருந்தது என்று நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கிறது!! தீ என்ற சொல் எத்தனை முறை திருக்குறளில் வருகிறது?? எங்கோ பதினெட்டு என்று படித்த நினைவு. பாயிரத்தில் தீ, நெருப்பு, எரி போன்ற சொற்கள் இல்லை. ஒளியோடு சேர்த்தால், அறத்திலும் பொருளிலும் இருபத்து சொச்சம் தேறிற்று. ஒளியை, தீயோடு ஒப்பாக எண்ணாவிட்டால் ஒரு பத்து குறையும். அப்படியானால், காமத்துப்பாலில் நான்கைந்து தீதானா… ஆச்சரியம்தான்… 

முன்பொரு காலத்தில் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். இப்போது யோசித்துப் பார்த்தால். தேவை எது ஆசை எது என்று பிரிப்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல இன்று மட்டுமல்ல, சங்கப்புலவர்களுக்கும் சிரமம் தான் போலும். பசியும் தீ தான், ஆசையும் தீதான்!! பசி என்பது அடிப்படைத் தேவை! ஆசை என்பது அடிப்படைத் தேவை இல்லை. அப்படியென்றால் இரண்டுக்கும் தீ என்ற சொல் ஏன்? இரண்டுமே எரித்துவிடும் தன்மையால் ஒன்று தான். கவனமாக இல்லையென்றால் தகுதியற்ற ஒன்றிற்காக ஆசையினாலும் அல்லது பசியால் பத்தும் பறந்து போனாலும் எரிக்கவோ, எரிந்துபோகவோ தலைப்படலாம்! 

தணலென்ற ஒரு சொல் மூட்டிய தீ இந்த இந்த மன ஓட்டம்.... மனதின் வேகம் காற்றின் வேகத்தை, ஒலியின் வேகத்தை விட அதிகம். அவற்றின் பரவலை விட, ஒழுங்கற்றது. ஒலி பரவ ஊடகம் தேவை; காற்று பரவ வேறு ஊடகம் தேவையில்லை; வெற்றிடமாக இருந்தால் இன்னும் வேகமாகப் பரவும். மனம் வெற்றிடமானால், எண்ணவோட்டம் நிற்கும், துறவு வசப்படும் என்றுதான் கூறுகிறார்கள். என்றோ ஒருநாள் எழுதிவைத்த இந்தக் கட்டுரையைப் பார்க்கும்போது, என்றாவது ஒருநாள் வெற்றிடமாவோம் என்ற எண்ணம் நகைப்பைத் தருகிறது. இருந்தாலும் யானை பிழைத்த வேல் உயர்வல்லவா... வெற்றிடமாக முயற்சிதான் செய்வோமே!!