Tuesday, March 3, 2015

கொக்கென்று நினைத்தாயோ?

பக்தியோகம், கர்மயோகம் இரண்டையும் ஒப்பிட்டு, என் மனோபாவத்துக்கு பக்தியோகம் சரிபாடாது என்று முடிவுக்குவந்த போதிலும் கர்மயோகம் கடினமானதாக இருக்கிறது. பஞ்ச காலத்தில் விரதம் இருப்பதாய் அலட்டிக்கொள்வதில் என்றுமே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. சந்நியாசம் என்பது உறவறுத்துப் போவதிலில்லை! உறவுகளோடு இருந்தாலும் பற்றின்றி இருப்பதே சரி என்று முயன்றாலும் சறுக்கத்தான் செய்கிறது! அகந்தையின்றி, பற்றின்றி ஆனால் முழு அக்கறையுடன் கடமைகளை நிறைவேற்றுவதே சரியான வழியென்று ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்டுவிட்ட போதிலும், அதைக் கடைபிடிப்பதில்தான் இன்றும் எத்தனை சறுக்கல்கள், எத்தனை குழப்பங்கள்! எது கடமை என்று உணர்வதிலேயே முதல் குழப்பம் ஆரம்பித்து விடுகிறது. குலத்தொழில் என்று இருந்திருந்தால் இந்த குழப்பம் இருக்காது என்று கொள்வதற்கில்லை. பெற்றோர் செய்த தொழிலை அதே அளவில் செய்வது மட்டும் போதும் என்பதில்லையே! புது உத்திகளை, புது கருவிகளைச் செய்து குலத்தொழிலை முன்னேற்றுவது தேவையா இல்லையா என்ற குழப்பம் அப்போதும் இருக்கத்தானே செய்திருக்கும்? ஆனால், விஸ்வாமித்திரர் கொண்ட கோபம் ஏற்படுத்திய திரிசங்கு சொர்க்கம் போலாகாமல், பகீரதன் கொணர்ந்த கங்கை போல முன்னேற்றம் அல்லது மாற்றம் ஏற்படுத்துவது எப்படி என்பது இப்போதைய கேள்வி!


பல யாகங்கள் செய்வதைவிடவும் தனது கடமைகளைச் சரியாகச் செய்தல் உயர்ந்தது. சரி. அதேசமயம் கொல்லவரும் பசுவையும் கொல்லும் சலனமின்மையையும் கைகொள்ளவேண்டியிருக்கிறது. எது கடமை என்று அறிந்து கொள்ளவே வாழ்வின் பாதி கழிந்தால், அதை, சரியாகச் செய்யக்கற்பதெப்போது? கர்வம் கழிப்பது எப்போது? கொக்காய் நினைத்து கர்மயோகியை எரிக்கத் துணியும் அகந்தையறுப்பது எப்படி? எப்போது? எதிரிலிருப்பது பசுவா, கொக்கா, வாசுகியா? உருவாக இருப்பது திரிசங்கு சொர்க்கமா, பொங்கி வழியும் கங்கையா? அப்படியே கங்கை வந்தாலும், அவள் வேகம் தாங்கி ஜடாமுடி விரித்துக் காக்கும் பேரன்பும் உரமும் வேண்டுமன்றோ?